ரவுடி பாம் ரவி கொலையில் பா ஜ க பிரமுகர் சிக்கினார்
ரவுடி பாம் ரவி கொலையில் பா.ஜ.க. பிரமுகர் சிக்கினார். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
புதுச்சேரி
ரவுடி பாம் ரவி கொலையில் பா.ஜ.க. பிரமுகர் சிக்கினார். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பிரபல ரவுடி
புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்தவர் பிரபல ரவுடி பாம் ரவி (வயது 33). இவர் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் இருந்தன. இந்தநிலையில் ஜாமீனில் வெளியே இருந்து வந்த பாம் ரவி கடந்த அக்டோபர் மாதம் 24-ந் தேதி தனது நண்பர் அந்தோணி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வாணரப்பேட்டையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாட்டு வெடிகுண்டுகளை வீசி அரிவாளால் வெட்டி இருவரும் கொலை செய்யப்பட்டனர்.
ரவுடி திப்லான் கொலைக்கு பழிக்குப்பழியாக நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சிறையில் இருந்தபடி சதி
விசாரணையில், மற்றொரு கொலை வழக்கில் கைதாகி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வினோத், தீனு ஆகியோரது சதி திட்டத்தின்படி கூலிப்படை வைத்து பாம் ரவி கொலை செய்யப்பட்டார். அவரை எதிரிகள் குறி வைத்து இருந்த நிலையில் அந்தோணியும் வந்ததால் அவரும் இதில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தவர்கள், கூலிப்படையினர் தங்க இடம் கொடுத்தவர்கள் என வினோத்தின் தாய் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். வெடிகுண்டு கொடுத்து உதவியதாக லாஸ்பேட்டையை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் பிரவீன், அருண் ஆகிய 2 பேரும் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
பா.ஜ.க. பிரமுகர்
இந்தநிலையில் பாம் ரவி கொலையில் வாணரப்பேட்டையை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் போலீஸ் பிடியில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவரை முதலியார்பேட்டை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் அவருக்கு எந்த வகையில் தொடர்பு என்பது குறித்து துருவி துருவி விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story