மலைப்பகுதிகளில் மண்சரிவை தடுக்க புதிய என்ஜினீயரிங் தொழில்நுட்ப முறை - அமைச்சர் தொடங்கி வைத்தார்


மலைப்பகுதிகளில் மண்சரிவை தடுக்க புதிய என்ஜினீயரிங் தொழில்நுட்ப முறை - அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 Dec 2021 3:55 AM IST (Updated: 23 Dec 2021 3:55 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் மலைப்பகுதிகளில் மண் சரிவை தடுக்க புதிய என்ஜினீயரிங் தொழில்நுட்ப முறையை நீலகிரியில் அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

ஊட்டி,

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ‘தினத்தந்தி' நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆண்டுதோறும் மழைக்காலங்களில், மலைப்பகுதிகளில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதும், வீடுகள் இடிந்து விழுவதும், போக்குவரத்து பாதிக்கப்படுவதும், மரங்கள் சரிந்து விழுவதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

மேலும் ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு, பயணிகள் பாதி வழியிலேயே இறங்கி நடந்து செல்லும் நிலையும் இருக்கிறது. ஆண்டாண்டு காலம் நடக்கும் இந்த பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில், நிலச்சரிவினை தடுப்பதற்கு நிலச்சரிவு மேலாண்மை மேற்கொண்டு வருகிறோம்.

284 இடங்கள்

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை துறையினரால், தமிழகத்தில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் என 4 ஆயிரத்து 170 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இதில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் இயற்கை பேரிடரால் குறிப்பாக நிலச்சரிவினால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் என 284 இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இதில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையில் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் மட்டும் 49 ஆகும். இவற்றில் 11 பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையால் தடுப்பு பணிகள் செய்து முடிக்கப்பட்டு உள்ளன.

38 பகுதிகளில் பணிகள் கருத்து நிலையில் உள்ளது. ‘தேசிய நெடுஞ்சாலை எண் 181' தமிழகம்-கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையாகும். இந்த சாலை ஊட்டி மற்றும் குன்னூர் மலைப்பகுதி வழியாக செல்கிறது.

நிலச்சரிவை தடுக்கும் தொழில்நுட்பம்

இதையடுத்து, டெல்லி ஐ.ஐ.டி. பேராசிரியர் அயோத்திராமன் தலைமையிலான குழுவும், தமிழக நெடுஞ்சாலைத்துறை தலைமை என்ஜினீயர்கள் சந்திரசேகரன், பாலமுருகன் ஆகிய 2 குழுக்களும் இணைந்து மண் அரிப்பை தடுத்து, நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க புதிய என்ஜினீயரிங் தொழில்நுட்ப முறையை வடிவமைத்து உள்ளனர். இதனை பரீட்சார்த்தமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் கோடாப்பமந்து மற்றும் பாக்கிய நகர் பகுதியில் செயல்படுத்தி இருக்கிறோம்.

புதிய தொழில்நுட்ப முறையானது, மலைப்பகுதியின் மேற்பரப்பை தயார்படுத்துதல், மலையின் மேற்பரப்பின் சாய்வுதளத்தை வலுப்படுத்த மண் ஆணி அமைத்தல், மண் அரிப்பை தடுக்க ‘ஹைட்ரோ சீடிங்' எனப்படும் நீர் விதைப்பு முறையை மேற்கொள்ளுதல், மண் வலிமையை உறுதி செய்ய மண் சரிவை தடுக்க ‘ஜியோ கிரிட்' மூலம் மண் ஸ்திரத்தன்மையை அதிகப்படுத்தி வலுவூட்டுதல், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், மலைப்பகுதியின் சாய்வுதளத்தில் 2 மீட்டர் இடைவெளியில் 200 மி.மீ. விட்டமுள்ள 3 முதல் 5 மீட்டர் வரை துளையிடுவது, துளைகளில் 32 மி.மீ. அளவுக்கு இரும்பு கம்பி பொருத்துவது, இந்த துளையில் இரும்பு கம்பியை நிலைநிறுத்த மண்ணுடன் பிணைப்பை உறுதி செய்ய சிமெண்டு மற்றும் மணல் கலவை ‘சார்ப் கிரிப்' முறையில் அதிக அழுத்தத்துடன் செலுத்தப்படுவது,

மண் அரிப்பை தடுக்க..

மண் அரிப்பை தடுக்க நீர் விதைப்பு முறையை அதாவது புல் விதை, தழைக்கூளம், உரம், விதை வளர்ச்சியை ஊக்குவிக்கும் காரணிகளை நீரில் கலந்து நீர்க்குழம்பை உருவாக்கி கலந்து பயன்படுத்துதல், இந்த பணிகள் முடிந்த உடன் புல் மற்றும் தாவரங்கள் வளர தண்ணீர் தெளித்து 3 மாதம் பராமரிப்பு செய்யப்படும்.

இந்த புதிய என்ஜினீயரிங் தொழில்நுட்பமுறை தற்போது 2 இடங்களில் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மண் சரிவு ஏற்படும் அனைத்து இடங்களிலும் இந்த தொழில்நுட்பமுறை செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story