ஆபாசமாக படம் எடுத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. அரசு பள்ளி ஆசிரியர் கைது
ஆபாசமாக படம் எடுத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் அருள்குமரன் (வயது 39). இவர், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கன்னியப்பபிள்ளைபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
அவருடைய நண்பர் ஒருவர், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். அவருடைய அக்காள், அவரது 27 வயது மகள் ஆகியோர் கோர்ட்டு வழக்கு சம்பந்தமாக ஆண்டிப்பட்டிக்கு வந்தனர். பின்னர் அவர்கள், கதிர்நரசிங்கபுரத்தில் உள்ள அருள்குமரன் வீட்டுக்கு வந்து தங்கினர்.
அப்போது அந்த இளம்பெண் குளியலறையில் இருக்கும்போது பல முறை ரகசியமாக அருள்குமரன் ஆபாசமாக படம் பிடித்ததாக தெரிகிறது. அதை வைத்து அந்த இளம்பெண்ணுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் அந்த இளம்பெண்ணுக்கும், அருள்குமரனுக்கும் திருமணம் நடந்ததாக போலியாக படம் ஒன்றை தயாரித்துள்ளார். அதனை இளம்பெண்ணின் தாயிடம் காண்பித்து, வேறு யாருக்கும் அவரை திருமணம் செய்து வைக்கக்கூடாது என்று செல்போனில் அருள்குமரன் மிரட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த இளம்பெண்ணின் தாய் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அருள்குமரனிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்த இளம்பெண்ணின் ஆபாச படங்களை கைப்பற்றினர்.
இதையடுத்து அருள்குமரன், அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய தந்தை முருகேசன், தாய் சரோஜா, தங்கை மீனா ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் அருள்குமரன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story