மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீசார் பதிவு செய்த வழக்கு ரத்து - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு
யூ-டியூபர் மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரையைச் சேர்ந்த யூ-டியூபர் மாரிதாஸ், நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதாகக் கூறி, இவர் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை ஐகோர்ட்டு மதுரைக்கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.
அதே சமயம் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அனுப்பியது போல் போலி மின்னஞ்சல் அனுப்பியதாக சென்னையில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மாரிதாசை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது காதர் மீரான் என்பவர் மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீசில் ஒரு புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில் இந்தியாவில் தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் கொரோனாவை பரப்புகிறார்கள் என்று முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பேசி பதிவிட்ட மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிட்டு இருந்தார். இதன் அடிப்படையில் மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன் மற்றும் போலீசார் மாரிதாசை கைது செய்தனர்.
இதில், மேலப்பாளையம் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மாரிதாஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு விசாரணையும் கேட்ட நீதிபதி, யூ-டியூபர் மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
Related Tags :
Next Story