ஆன்லைன் வழக்கு விசாரணையின்போது இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வக்கீல் நேரில் ஆஜராக வேண்டும்


ஆன்லைன் வழக்கு விசாரணையின்போது இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வக்கீல் நேரில் ஆஜராக வேண்டும்
x
தினத்தந்தி 23 Dec 2021 9:28 PM GMT (Updated: 23 Dec 2021 9:28 PM GMT)

ஆன்லைன் வழக்கு விசாரணையின்போது பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வக்கீல், கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் வருகிற ஜனவரி 20-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் விசாரிக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் விசாரணைக்கு ஆஜராகி இருந்த வக்கீல் ஒருவர், தன் முன்புள்ள கேமரா ஆனில் உள்ளது என்று தெரியாமல் இளம்பெண் ஒருவருடன் சல்லாபத்தில் ஈடுபட்டார். இதை ஆன்லைனில் ஆஜராகி இருந்த வக்கீல்கள், பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதில் யாரோ ஒருவர் அந்த சல்லாப காட்சியை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

போலீஸ் விசாரணை

இந்த வீடியோவின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர்.

பின்னர், இதுபோன்ற சம்பவங்களை கண்ணை மூடிக்கொண்டு ஐகோர்ட்டு வேடிக்கை பார்க்க முடியாது. இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, ஆரம்பகட்ட விசாரணையை மேற்கொண்டு, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

வக்கீல் யார்?

இந்த ஆபாச வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் மேலும் பரவாமல் சென்னை போலீஸ் கமிஷனர் தடுக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “அந்த வீடியோவில் உள்ளவர் வக்கீல் சந்தானகிருஷ்ணன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த பெண் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது” என்று கூறி, ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை நீதிபதிகள் முன்பு தாக்கல் செய்தார்.

மிகப்பெரிய அசிங்கம்

இதையடுத்து நீதிபதிகள், இந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சியை வக்கீல்கள் மட்டும் பார்க்கவில்லை, உலகமே பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளது. எனவே, இந்த வழக்கின் புலன் விசாரணையில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது என்று கூறினர்.

பின்னர், இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை ஜனவரி மாதம் 20-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அன்று சம்பந்தப்பட்ட வக்கீல் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக வேறு ஒரு வழக்கை விசாரிக்கும்போது, இந்த வீடியோ காட்சி வெளியானது குறித்து கோர்ட்டில் இருந்த வக்கீல்களிடம் பேசிய நீதிபதி பி.என்.பிரகாஷ், ‘இந்த சம்பவம் நமக்கு மிகப்பெரிய அசிங்கம். இதற்காக நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விடலாமா என்றுகூட யோசித்தேன்' என்று வேதனையுடன் கருத்து தெரிவித்தார்.

Next Story