நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக 4 ஆசிரியர்களுக்கு போலீசார் சம்மன்


நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக 4 ஆசிரியர்களுக்கு போலீசார் சம்மன்
x
தினத்தந்தி 24 Dec 2021 2:27 PM IST (Updated: 24 Dec 2021 2:27 PM IST)
t-max-icont-min-icon

சாஃப்டர் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக 4 ஆசிரியர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

நெல்லை,

நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து,தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், மாவட்டத்தோறும் அங்கு இருக்க கூடிய முதன்மை கல்வி அதிகாரி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சேர்ந்து குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு, கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து,இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியர், ஒப்பந்தாரர் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் பாஸ்கரன் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளார். 

இந்த விபத்து தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர், மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில்,சாஃப்டர் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக 4 ஆசிரியர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். 

விபத்து நடந்தபோது சம்பவ இடத்தில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்களுக்கு போலீசார்  சம்மன் அனுப்பி உள்ளனர். காயமுற்ற மாணவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை என்ற புகார் எழுந்த நிலையில்,4 ஆசிரியர்களிடம்  போலீசார்  விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story