ஒமைக்ரான் பரவல் எதிரொலி நோயாளிகளுக்கு ரோடியர் மில்லில் படுக்கை வசதி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு


ஒமைக்ரான் பரவல் எதிரொலி நோயாளிகளுக்கு ரோடியர் மில்லில் படுக்கை வசதி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு
x
தினத்தந்தி 25 Dec 2021 8:48 PM IST (Updated: 25 Dec 2021 8:48 PM IST)
t-max-icont-min-icon

ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் ரோடியர் மில்லில் படுக்கை வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி
ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் ரோடியர் மில்லில் படுக்கை வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா பரவல்

புதுவையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதிதாக உருவெடுத்துள்ள ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டால் அவர்களை அனுமதித்து சிகிச்சை அளிக்க போதிய ஏற்பாடுகளை செய்ய மத்திய அரசு மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தற்போது செயல்படாமல் இருக்கும் ரோடியர் மில் வளாகத்தில் படுக்கை வசதிகளை ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

கவர்னர் ஆய்வு

இந்தநிலையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்  இன்று ரோடியர் மில்லில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் மில்லில் பணியாற்றிய தொழிலாளர்கள் மில்லின் பாரம்பரியத்தை எடுத்துக்கூறினார்கள்.
இந்த ஆய்வின்போது சம்பத் எம்.எல்.ஏ. சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, மில்லின் மேலாண் இயக்குனர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தடுப்பூசிக்கு எதிர்ப்பு

புதுவையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். அது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. இதை எதிர்த்து சிலர் போராடுகிறார்கள். போராடுவதற்கு பதிலாக உங்கள் சக்தியை பொதுமக்களின் பாதுகாப்புக்கு பயன்படுத்துங்கள். தடுப்பூசிக்கு எதிராக போராடுவது என்பது தவறான அணுகுமுறை.
ரோடியர் மில்லில் முன்பு 8 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி உள்ளனர். ரோடியர் மில் குறித்து முதல்-அமைச்சரிடமும் பேசியுள்ளேன். ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் கூடுதல் படுக்கை வசதிகளை செய்து  வைத்திருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே இங்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்துள்ளோம். இதேபோல் தேவையான பல இடங்களில் படுக்கை வசதிகளை ஏற்படுத்தலாம்.
இந்த மில்லின் மாண்பை இங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் எடுத்து கூறினர். மில்லை இயக்க நடவடிக்கை எடுக்கும் எண்ணம் உள்ளது. இதேபோல் பல தொழிற்சாலைகள் அமைந்தால் வேலைவாய்ப்பு பெருகும். இதுதொடர்பாக முதல்-அமைச்சரிடமும் பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story