சுற்றுலா பயணிகள் வருகையால் களைகட்டிய புதுச்சேரி


சுற்றுலா பயணிகள் வருகையால் களைகட்டிய புதுச்சேரி
x
தினத்தந்தி 25 Dec 2021 9:24 PM IST (Updated: 25 Dec 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகையால் களை கட்டியது.

புதுச்சேரி
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகையால் களை கட்டியது.

கேளிக்கை நிகழ்ச்சிகள்

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு புதுவையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் சரிவர நடைபெறவில்லை. அதுமட்டுமின்றி கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு கடைசி நேரம் வரை அப்போது கவர்னராக இருந்த கிரண்பெடி அனுமதி அளிக்கவில்லை. இதனால் புதுவைக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாட வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
ஆனால் இந்த ஆண்டு ஒமைக்ரான் பரவல் சூழ்நிலையிலும்  கிறிஸ்துமஸ், புத்தாண்டை கட்டுப்பாடுகளுடன் கொண்டாட புதுவை அரசு அனுமதி அளித்தது. ஓட்டல்கள் மற்றும் பொது இடங்களில் கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

களை கட்டிய சுற்றுலா தலங்கள்

புதுவையில் கிறிஸ்மஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா என பல மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று புதுவையில் குவிந்தனர். 
சுற்றுலா பயணிகள் வருகை எதிரொலியாக சுற்றுலா தலங்கள் களைகட்டியது. புதுவை கடற்கரை, சுண்ணாம்பாறு படகு குழாம், பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, ஊசுட்டேரி, அரவிந்தர் ஆசிரம், மணக்குள விநாயகர் கோவில் பாண்டி மெரினா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
நகரின் அனைத்து வீதிகளையும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் ஆக்கிரமித்தன. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை காரணமாக புத்தாண்டு வரை இந்த சுற்றுலா பயணிகள் கூட்டம் புதுவையில் நிறைந்திருக்கும்.

நிரம்பி வழியும் அறைகள்

இதற்கிடையே தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாடட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் புதுவையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தென் மாநில மக்களின் பார்வை புதுச்சேரி பக்கம் திரும்பியுள்ளது. அவர்கள் புத்தாண்டை கொண்டாட புதுவையில் உள்ள ஓட்டல்களில் அறைகளை பதிவு செய்துள்ளனர். இதனால் அனைத்து ஓட்டல்களும் நிரம்பி வழிகின்றன. புத்தாண்டு முடியும் வரை எந்த ஓட்டலிலும் அறைகள் இல்லை என்ற நிலையே நிலவுகிறது.

Next Story