கோவில்களில் பிரசாதம் தயாரிக்க ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்: அறநிலையத்துறை


கோவில்களில் பிரசாதம் தயாரிக்க ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்: அறநிலையத்துறை
x
தினத்தந்தி 25 Dec 2021 9:47 PM IST (Updated: 25 Dec 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் நெய்வேத்தியம் மற்றும் பிரசாதங்கள் தயாரிக்க ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

ஆவின் தயாரிப்புகள் தயார் நிலை

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் மற்றும் இதர தேவைகளுக்கு ஆவின் நிறுவனம் மூலம் தயார் செய்யப்படும் வெண்ணெய் மற்றும் நெய் பொருட்களை கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும். ஆவின் நிறுவனத்தில் 15 மில்லி லிட்டர் முதல் 20 கிலோ வரையிலான எடை கொண்ட அளவுகளில் ஆவின் நிறுவன தயாரிப்புகள் விற்பனைக்கு தயாராக உள்ளது என்று தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குனர், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனருக்கு எழுதிய கடிதத்தில் கூறி உள்ளார்.

அதன்படி கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்களின் தரத்தை மேம்படுத்தவும், கருவறை மற்றும் பிரகாரங்களில் தரமற்ற நெய்யை பயன்படுத்தி விளக்கு, தீபம் ஏற்றுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அறநிலையத்துறையில் பணியாற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

பிரசாதங்களுக்கு ஆவின் நெய்

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ,குமரகுருபரன், அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவில்களில் விளக்கு ஏற்றவும் மற்றும் நெய்வேத்திய பிரசாதம் தயார் செய்யவும் பயன்படுத்தப்படும் வெண்ணெய், நெய் போன்ற பொருட்களை ஆவின் நிறுவனம் மூலம் மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும்.

அதேபோல் கோவில்களில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பிரசாதங்களை தயார் செய்ய பயன்படுத்தப்படும் நெய் மற்றும் வெண்ணெய் போன்ற பொருட்களையும், பக்தர்களுக்கு நெய்விளக்கு ஏற்றவதற்கு விற்பனை செய்யப்படும் நெய்யினையும் ஆவின் நிறுவனம் மூலம் மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும்.

புத்தாண்டு முதல் அமல்

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும், கோவில் உள்துறை பயன்பாட்டிற்கும், பிரசாதம் தயாரிப்பிற்கும் தேவைப்படும் நெய் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை ஆவின் நிறுவனம் மூலம் மட்டுமே வருகிற 1-ந்தேதி புத்தாண்டு முதல் கொள்முதல் செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதனை அனைத்து சார்நிலை அலுவலர்களும் கடைப்பிடிப்பதுடன், தங்களது ஆளுகையின் கீழ் உள்ள அனைத்து அறநிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story