17-வது நினைவு தினம் இன்று: ஆண்டுகள் ஆனாலும் சுனாமியின் ஆறாத வடு


17-வது நினைவு தினம் இன்று: ஆண்டுகள் ஆனாலும் சுனாமியின் ஆறாத வடு
x
தினத்தந்தி 25 Dec 2021 7:58 PM GMT (Updated: 25 Dec 2021 7:58 PM GMT)

“அலைகள் ஓய்வதில்லை. அதற்கு ஓய்வும் இல்லை” என்பது எல்லோருக்கும் தெரியும். காலாகாலமாக கடலோரம் வசிக்கும் மீனவர்களின் காதுகளில் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் சங்கீதமே அலைகளின் ஓசைதான்.

இசைக்க தெரிந்த அலைகளுக்கு இம்சிக்கவும் தெரியும் என்பதை உணர்த்திய ஆண்டு 2004. 17 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் (டிசம்பர் 26) அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி என்னும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு உருவாகி 14 நாடுகளில் கடலோர பகுதிகளுக்குள் புகுந்தது.

அச்சத்தை ஏற்படுத்திய சுனாமி

திடீரென தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் நிலைகுலைந்துபோன மக்களுக்கு, “என்னவோ உலகமே அழிகிறதோ?” என்று எண்ணும் அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளில் கரையோரம் வசித்த மக்களை வாரி சுருட்டியது. இந்த எதிர்பாராத பேரிடரில் மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் பலியானார்கள். 43 ஆயிரத்து 786 பேர் காணாமல் போனார்கள்.

தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் சுனாமியின் கோர தாண்டவம் அரங்கேறியது. மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்தில் மட்டுமே 6 ஆயிரத்திற்கு மேல் மாண்டுபோனார்கள். கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் இறந்தனர். வயது வித்தியாசம் இன்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உயிர் நீத்தனர். அன்று.. குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களின் கதறல், 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்னமும் கடற்கரையோரம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

புத்தாண்டு புத்துயிர் அளிக்கட்டும்

ஒவ்வொருவரின் மனதில் ஏற்பட்ட காயத்திற்கான மருந்து காலத்திடம் மட்டுமே இருக்கிறது என்றாலும், அந்த காலத்தாலும் அழிக்க முடியாத வடுவை சுனாமி ஏற்படுத்தி சென்றுவிட்டது. இனியும் இதுபோன்ற கோர நிகழ்வு ஏற்பட வேண்டாம் என்பதே எல்லோருடைய வேண்டுதலாகும். ஏற்கனவே, கொரோனா.. கொரோனா.. என்று 2 ஆண்டுகள் இயல்பு வாழ்க்கையை மறந்துவிட்டோம். பிறக்கப்போகும் 2022 புத்தாண்டாவது அனைவரின் நல்வாழ்வுக்கு புத்துயிரை அளிக்கட்டும்.


Next Story