பாலம் சீரமைப்பு பணி காரணமாக அரக்கோணம்-காட்பாடி மார்க்கத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
அரக்கோணம்-காட்பாடி மார்க்கத்தில் பாலம் சீரமைப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பாலத்தில் விரிசல்
சென்னை ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட அரக்கோணம்-காட்பாடி பகுதியில் முகுந்தராயபுரம்-திருவலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இரு வழி ரெயில்வே பாலத்தில், சமீபத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பாலத்தை சீரமைக்கும் பணி நடந்து வருவதால், அந்த வழியாக செல்லும் ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆங்கிலேயர் காலக்கட்டத்தில் 1865-ம் ஆண்டு பொன்னை ஆற்றின் குறுக்கே இந்த பாலம் கட்டப்பட்டது. இந்தநிலையில், நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு காரணமாக இந்த பாலத்தின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டு, கடந்த 23-ந்தேதி இந்த பாலத்தின் தூண் ஒன்றில் விரிசல் ஏற்பட்டிருந்ததை ரெயில்வே அதிகாரிகள் கண்டறிந்தனர்.
ரெயில்கள் ரத்து
இதையடுத்து பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து முழுவதையும் சென்னை ரெயில்வே கோட்டம் ரத்து செய்தது. அதன்படி சென்னையில் இருந்து கோவை, மைசூரு, பெங்களூரு, ஈரோடு, திருவனந்தபுரம், மங்களூரு, மேட்டுப்பாளையம், ஜோலார்பேட்டை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்தும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன.
மேலும், பல ரெயில்கள் சென்னை-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு காட்பாடியில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையான நேற்று சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பலர் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். சென்னை சென்டிரலில் இருந்து தினசரி 50-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரெயில்களில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில், ரெயில்கள் ரத்தால் பெங்களூரு, கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
விரைவில் ரெயில்கள் இயக்கப்படும்
சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், ‘ரெயில்வே என்ஜினீயர்கள் மற்றும் கட்டமைப்பு என்ஜினீயர்கள் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ஒரு தொழில்நுட்ப வல்லுனர் குழு, பாலத்தை ஆய்வு செய்துள்ளனர். இந்த பாலத்தை விரைவில் மீட்டெடுக்கவும், கட்டமைப்பு சேதத்தை சரிசெய்யவும், வேக கட்டுபாடுகளுடன் இரு வழித்தடங்களிலும் ரெயில் போக்குவரத்தை மேற்கொள்ளவும் அனைத்து முயற்சிகளும் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தான் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஏற்கனவே இதற்கான அறிவிப்புகளும் பயணிகளுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு விட்டது. இன்னும் ஓரிரு நாளில் பாலம் சரிசெய்யப்பட்டு ரெயில்கள் மீண்டும் இயக்கப்படும்,’ என்றனர்.
Related Tags :
Next Story