சிமெண்டை பற்றாக்குறை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை; நிர்மலா சீதாராமனிடம், என்.சீனிவாசன் கோரிக்கை
தென்னிந்தியாவில் உபரியாக உள்ள சிமெண்டை பற்றாக்குறை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமனிடம், என்.சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சந்திப்பு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை, தென்னிந்திய சிமெண்டு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவரும், நிர்வாக இயக்குனருமான என்.சீனிவாசன் நேற்று முன்தினம் சென்னையில் சந்தித்து பேசினார். அப்போது, நிர்மலா சீதாராமனிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை என்.சீனிவாசன் கொடுத்தார்.
அரசின் ஆதரவு தேவை
என்.சீனிவாசன் கொடுத்த அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
மிகவும் கடினமான சூழல்களில் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளித்து பொருளாதாரத்தை திறம்பட நிர்வகித்து வருவதை பாராட்டுகிறேன். 2021-22-ம் ஆண்டு பட்ஜெட்டில் புதிய சாலை திட்டங்கள், மெட்ரோ ரெயில் நீட்டிப்பு மற்றும் சரக்கு வழித்தடம் என தென்னிந்தியாவுக்கு முதல் முறையாக பெரிய அளவிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. பல்வேறு வருவாய் ஆதாரங்கள், ஜி.எஸ்.டி. மூலமாக ஆண்டுக்கு மட்டும் சிமெண்டு தொழிற்சாலைகள் ரூ.30 ஆயிரம் கோடி பங்களித்து வருகின்றன.
நமது சிமெண்டு தொழிற்சாலை துறை உலகிலேயே சீனாவுக்கு அடுத்தப்படியான இடத்தில் உள்ளது. மேலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை உருவாக்குவதாகவும் உள்ளது. சிமெண்டு தொழிலின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் நிலைநிறுத்துவதற்கு அரசின் ஆதரவு தேவைப்படுகிறது. தென் இந்தியாவில் ஆண்டுக்கு 180 மில்லியன் டன் சிமெண்டு உற்பத்தி திறன் உள்ளது. இது ஒட்டுமொத்த இந்திய உற்பத்தியில் 40 சதவீதம் ஆகும்.
பற்றாக்குறை பிராந்தியங்களுக்கு...
சிமெண்டின் மூலப்பொருளான சுண்ணாம்புக்கல் 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை தென்னிந்தியாவில் கிடைக்கிறது. வட இந்தியா, மத்திய இந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக சிமெண்டு உற்பத்தியில் பற்றாக்குறை உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் சாலை திட்டங்களுக்கு சிமெண்டு பற்றாக்குறை உள்ளது என மத்திய மந்திரி நிதின் கட்கரி தொடர்ச்சியாக புகார் கூறி வருகிறார். கிழக்கு இந்தியாவில் பல்லாண்டு காலமாக சிமெண்டு தட்டுப்பாடு நிலவுகிறது.
அதே சமயத்தில் தென்னிந்தியாவில் சிமெண்டு உற்பத்தி உபரியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வட, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் சிமெண்டுக்கு தட்டுப்பாடு நிலவும் நேரத்தில், தென்னிந்தியாவில் தேவைக்கு அதிகமாக இருக்கிறது. எனவே தென் மாநிலங்களில் உபரியாக இருக்கும் சிமெண்டினை, பற்றாக்குறை உள்ள பிராந்தியங்களுக்கு நீண்ட தூரம் செல்லும் சரக்கு ரெயில் மூலமாகவோ அல்லது பிற வழிகளிலோ கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறப்பு குழு அமைக்க வேண்டும்
அண்டை நாடுகள், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் சிமெண்டு பொருட்களுக்கு கழிவுகளை கொட்டுவதற்கான வரி விதிப்பதால் நம்மால் ஏற்றுமதி செய்யமுடியவில்லை. அதே நேரத்தில் பிற நாடுகளில் இருந்து வரி எதுவும் விதிக்காமல் நாம் இறக்குமதி செய்கிறோம். எனவே பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிமெண்டு, கிளிங்கருக்கு அதிக வரி விதிக்கவேண்டும். இந்த விவகாரங்கள் தொடர்பாக விவாதிப்பதற்கு சிமெண்டு தொழிற்சாலையை சேர்ந்த பிரதிநிதிகள், தென்னிந்திய சிமெண்டு உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய சிறப்பு குழுவை அரசு அமைக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story