வக்கீல்களின் சேமநல நிதி ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் ரங்கசாமி அறிவிப்பு


வக்கீல்களின் சேமநல நிதி ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் ரங்கசாமி  அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Dec 2021 11:24 PM IST (Updated: 27 Dec 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

வக்கீல்களின் சேமநல நிதி ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி
வக்கீல்களின் சேமநல நிதி ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

கவுரவிப்பு

புதுவை வக்கீல்கள் சங்கம் சார்பில் சட்டநாள் விழா சன்வே ஓட்டலில்  நடந்தது. வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் தலைமை தாங்கினார். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு 25 ஆண்டுகள் பணி முடித்த வக்கீல்களை கவுரவித்தார். மேலும் வக்கீல்களுக்கான சேமநல நிதியையும் வழங்கினார்.
பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
இளம் வக்கீல்கள் தங்கள் சீனியர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதன் மூலம் தங்களது வாதத்திறமையை உயர்த்திக்கொள்ளலாம். இளம் வக்கீல்களுக்கு அரசு உதவித்தொகை வழங்குகிறது. அவர்கள் தனியாக வழக்காட தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வக்கீல்கள் வழக்குகளை விரைந்து முடிக்கவேண்டும். நீண்ட நாட்களாக நடைபெறும் வழக்குகளால் குழப்பம் தான் ஏற்படும். புதுவையை சேர்ந்த வக்கீல்கள் பெரிய அளவில் பாராட்டப்பட்டுள்ளனர்.

ரூ.25 லட்சம்

புதுவை கோர்ட்டில் உள்ள சிறுசிறு குறைகள் விரைவாக சரிசெய்யப்படும். நீதிமன்ற வளாகத்தில் கலந்தாய்வு கூடம் கட்டப்படும். வக்கீல்களுக்கு வழங்கப்படும் சேமநல நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும். நமது சட்ட அமைச்சர் அதிகாரம் தொடர்பாக 5 ஆண்டுகள் நீதிமன்றங்களுக்கு சென்று வந்துள்ளார். இறுதியில் ஒரு அதிகாரமும் இல்லை என்பதுதான் வெட்ட வெளிச்சமானது. தேர்தலை சந்தித்து ஆளும்போதுதான் அதன் சிரமம் தெரியும்.
10 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்புவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. தடையில்லாமல் பணிகள் நடைபெற மாநில அந்தஸ்து நமக்கு தேவை.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

ஐகோர்ட்டு கிளை

விழாவில் அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசும்போது, அடுத்த ஆண்டு முதல் சட்டத்துறை சார்பில் சட்டநாள் விழா கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புதுவையில் ஐகோர்ட்டு கிளை அமைக்க மத்திய அரசுக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ராஜா, டீக்காராமன், புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன், சட்டத்துறை செயலாளர் கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் சம்பத், அசோக்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story