நீதித்துறை பணியிடங்களில் புதுச்சேரி புறக்கணிக்கப்படவில்லை ஐகோர்ட்டு நீதிபதி ராஜா விளக்கம்


நீதித்துறை பணியிடங்களில் புதுச்சேரி புறக்கணிக்கப்படவில்லை ஐகோர்ட்டு நீதிபதி ராஜா விளக்கம்
x
தினத்தந்தி 27 Dec 2021 11:39 PM IST (Updated: 27 Dec 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

நீதித்துறை பணியிடங்களில் புதுச்சேரி புறக்கணிக்கப்படவில்லை என்று ஐகோர்ட்டு நீதிபதி ராஜா தெரிவித்தார்.

புதுச்சேரி
நீதித்துறை பணியிடங்களில் புதுச்சேரி புறக்கணிக்கப்படவில்லை என்று ஐகோர்ட்டு நீதிபதி ராஜா தெரிவித்தார்.
புதுவை வக்கீல்கள் சங்கம் சார்பில், சட்டநாள் விழா  கொண்டாடப்பட்டது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ராஜா, டீக்காராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

தொலைநோக்கு

விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி ராஜா பேசியதாவது:-
நான் 10-ம் வகுப்பு படிக்கும்போது காமராஜரை பார்த்துள்ளேன். தற்போது புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை பார்த்தால் காமராஜர் ஞாபகம் வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்கோடு அவர் கோர்ட்டு கட்டிடத்தை கட்டியுள்ளார். அங்கு இன்னும் 6 கோர்ட்டுகள் செயல்படும் வசதி உள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க அம்பேத்கர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு 2 வருடம் 11 மாதத்தில் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற அமெரிக்கா கூட அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க 13 வருடம் ஆனது. பாகிஸ்தானுக்கு 9 ஆண்டுகள் ஆனது.
புறக்கணிக்கப்படவில்லை
இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்திய மக்களை மட்டுமல்லாது பிற நாட்டு மக்களையும் காப்பதாக உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை நாம் உயிராக மதித்து நடக்கிறோம். நீதித்துறை பணியிடங்களில் புதுச்சேரி புறக்கணிக்கப்படுவதாக வக்கீல் சங்கத்தினர் தெரிவித்தனர்.
ஆனால் பணியிடங்கள் நிரப்பப்படும் போது புதுச்சேரி புறக்கணிக்கப்படுவதில்லை. தற்போது நியமிக்கப்பட்ட பணியிடங்களில் கூட அதிக அளவில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் தான் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு நீதிபதி ராஜா பேசினார்.

டீக்காராமன்

ஐகோர்ட்டு நீதிபதி டீக்காராமன் பேசியதாவது:-
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது புதுச்சேரி பிரெஞ்சு ஆளுகையின்கீழ் இருந்தது. புதுச்சேரியை இந்தியாவோடு இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது இணைப்பு தொடர்பாக ஆலோசிக்க  வக்கீல் அவுக்கா செல்லான் நாயக்கர் என்பவரோடு பேச பிரதமராக இருந்த நேருவே நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டுள்ளார். அவ்வளவு திறமை வாய்ந்தவர்களாக அந்த காலத்திலேயே புதுச்சேரி வக்கீல்கள் இருந்துள்ளனர். அவர்கள் பிரெஞ்சு சட்ட திட்டங்கள் மட்டுமல்லாது இந்திய சட்டங்களையும் படித்துள்ளனர்.
பிரெஞ்சு சட்டத்தில் சொத்துரிமை, வாரிசுரிமை வேறு விதமாக உள்ளது என்றும், புதுச்சேரியை இந்தியாவோடு இணைக்க தன்னால் ஒப்புதல் கடிதம் தரமுடியாது என்றும், அதை மக்கள் தான் முடிவு செய்யவேண்டும் என்றும் அவுக்கா செல்லான் நாயக்கர் தெரிவித்துள்ளார். 
அதன்பின்னரே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, புதுச்சேரி இந்தியாவோடு இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story