புலிகள் காப்பக திட்டம்: தமிழக அரசு நிதி ஒதுக்கி ஆணை
புலிகள் காப்பக திட்டத்திற்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
சென்னை,
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2021-22-ம் ஆண்டிற்கான சத்தியமங்கலம் காப்புக்காடு புலிகள் காப்பக திட்டத்திற்கான மத்திய நிதியுதவி ரூ.10.60 கோடி கேட்டு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் முன்மொழிவு அனுப்பினார். இது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் தொடரும் மற்றும் தொடராச் செலவீனங்களுக்காக ரூ.9.74 கோடிக்கான நிர்வாக ரீதியான அனுமதியை அளித்து மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அந்த திட்டத்தை ஆய்வு செய்து மீதத்தொகை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் புலிகள் திட்டத்தை அமல்படுத்த ரூ.4.87 கோடியை முதல் தவணையாக அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் கடிதம் எழுதியுள்ளார். அதைத்தொடர்ந்து அந்த திட்டத்திற்கான செலவுக்காக ரூ.9.74 கோடிக்கான நிர்வாக ஒப்புதலை அளித்து அரசு உத்தரவிடுவதுடன், முதல் தவணையாக ரூ.4.87 கோடி நிதியை அனுமதித்து அரசு ஆணையிடுகிறது.
அதுபோல ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை காப்புக்காட்டில் புலிகள் காப்பக திட்டத்திற்காக ரூ.4.25 கோடிக்கான நிர்வாக ஒப்புதலையும், முதல் தவணையாக ரூ.2.12 கோடி நிதியை அனுமதித்தும் அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story