வெளிநாட்டில் இருந்து சேலம் வந்தவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு? - பரிசோதனை முடிவுக்கு காத்திருப்பு


வெளிநாட்டில் இருந்து சேலம் வந்தவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு? - பரிசோதனை முடிவுக்கு காத்திருப்பு
x
தினத்தந்தி 28 Dec 2021 2:52 AM IST (Updated: 28 Dec 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் இருந்து சேலம் வந்த முதியவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்த பரிசோதனை முடிவுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

சேலம்,

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, அமெரிக்காவில் இருந்து சேலம் வந்த இளம்பெண் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டதால் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து சேலம் வந்த முதியவர் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சேலம் டவுன் பகுதியை சேர்ந்த 62 வயது முதியவர் ஒருவர், கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டில் தான்சானியா நகரில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் வந்த அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், முதியவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேசமயம், அந்த முதியவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். இதனையடுத்து 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு சளி மாதிரி (ஸ்வாப் டெஸ்ட்) எடுத்து பரிசோதனை முடிவுக்கு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் அதற்கான முடிவு தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த அடிப்படையில் தான்சானியாவில் இருந்து சேலம் வந்த முதியவருக்கு ஒமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்முடிவு 2 நாட்களில் தெரியவரும். அதுவரை அவருக்கு வழக்கம்போல் கொரோனாவுக்கான சிகிச்சை வழங்கப்படும் என்றனர்.

Next Story