‘தமிழ்நாட்டை போன்று இந்திய அளவில் பாடம் புகட்ட வேண்டும்’ பா.ஜ.க. மீது மு.க.ஸ்டாலின் மறைமுக தாக்கு


‘தமிழ்நாட்டை போன்று இந்திய அளவில் பாடம் புகட்ட வேண்டும்’ பா.ஜ.க. மீது மு.க.ஸ்டாலின் மறைமுக தாக்கு
x
தினத்தந்தி 27 Dec 2021 11:07 PM GMT (Updated: 27 Dec 2021 11:07 PM GMT)

தமிழ்நாட்டை போன்று இந்திய அளவில் பாடம் புகட்ட வேண்டும் என்று தா.பாண்டியன் உருவப்பட திறப்பு விழாவில் பா.ஜ.க.வை மறைமுகமாக மு.க.ஸ்டாலின் தாக்கி பேசினார்.

சென்னை,

மறைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உருவப்படம் திறப்பு விழா சென்னை பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். விழாவில், தா.பாண்டியன் உருவப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவரான ஆர்.நல்லக்கண்ணு திறந்து வைத்தார்.

மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

விழாவில் தா.பாண்டியனுக்கு புகழஞ்சலி செலுத்தி, மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தா.பாண்டியன் என்றாலே தலை தாழாத பாண்டியன். எப்போதும், யாருக்கும், எந்த சூழ்நிலையிலும் அஞ்சாத பாண்டியனாகதான் வாழ்ந்து மறைந்தார். கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் நிறைவுரை ஆற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தி.மு.க.வுக்கும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையே வெறும் நட்போ, தோழமையோ மட்டுமல்ல. நாம் ஒரே குடும்பம். அதுவும் சாதாரண குடும்பம் அல்ல. கொள்கை குடும்பம் என்ற உணர்வில்தான் நான் அந்த மாநாட்டில் பேசினேன்.

இங்கே கி.வீரமணி பேசும்போது, ‘தா.பாண்டியன் படம் மட்டுமல்ல, பாடம்’ என்று குறிப்பிட்டார். இந்த பாடத்தை தமிழக மக்கள் ஏற்கனவே புகட்டிவிட்டார்கள். இந்திய அளவில் இந்த பாடத்தை நாம் யாருக்கு புகட்ட வேண்டுமோ? அவர்களுக்கு புகட்டிட வேண்டும் என்று இந்த படத்திறப்பு விழாவில் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மனதை வாட்டுகிறது

கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் தா.பாண்டியன் பேசும்போது, ‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். நல்ல காலம் பிறக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற வேண்டும்’ என்றெல்லாம் எடுத்துரைத்தார். இன்றைக்கு தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால் இதை பார்க்க அவர் இல்லையே என்ற ஏக்கம்தான் எனது மனதை வாட்டிக் கொண்டிருக்கிறது.

பொதுவுடமை இயக்கத்தின் தியாகத்துக்கு எடுத்துக்காட்டு ஜீவா. அவரை நான் பார்த்தது கிடையாது. அவரது உரையை கூட கேட்டது கிடையாது. ஜீவா எப்படி பேசுவார் என்பதை கருணாநிதியே எங்களிடம் பேசி காட்டுவார். அத்தகைய ஜீவாவால் உருவாக்கப்பட்டு அவரை போன்று தமிழகம் முழுவதும் முழங்கி வந்தவர்தான் தா.பாண்டியன். கருணாநிதி போன்று அரசியல், இலக்கியத்தையும் இணைத்து இரண்டிலும் பயணித்தவர்.

உண்மையான அஞ்சலி

திராவிட இயக்கமும், பொதுவுடமை இயக்கமும் இணைந்து பயணிக்க வேண்டும் என்று தா.பாண்டியன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சிங்காரவேலர், பெரியார், ஜீவா ஆகியோர் இணைந்திருந்த காலம் போன்று உருவாக வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அத்தகைய உணர்வோடுதான் கருணாநிதி தா.பாண்டியனுடன் நட்பு கொண்டிருந்தார். நாமும் அப்படிதான் செயல்பட்டு வருகிறோம். அதனுடைய அடையாளம்தான் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்களும், பொதுவுடமை இயக்கத்தை சேர்ந்தவர்களும் ஒரே மேடையில் ஒரு சேர அமர்ந்திருக்கிறோம். நமக்குள் இருப்பது தேர்தல் உறவு மட்டுமல்ல, கொள்கை உறவு என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். கம்யூனிஸ்டு கட்சியினர் சொல்வது போன்று சுயமரியாதை சமதர்ம சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் சேர்ந்து நிச்சயம் ஒற்றுமையுடன் செயல்படுவோம். அதுவே தா.பாண்டியனுக்கு செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஏ.எம்.சலீம் ஆகியோரும் புகழஞ்சலி செலுத்தி பேசினார்கள்.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

தா.பாண்டியனுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.


Next Story