வருமானவரி தாக்கல் செய்ய 31-ந்தேதி கடைசி நாள் - அதிகாரிகள் தகவல்


வருமானவரி தாக்கல் செய்ய 31-ந்தேதி கடைசி நாள் - அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 28 Dec 2021 4:57 AM IST (Updated: 28 Dec 2021 4:57 AM IST)
t-max-icont-min-icon

வருமானவரித்துறைக்கு கடந்த 2020-21-ம் நிதியாண்டுக்கான, அபராதமின்றி வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த செப்டம்பர் மாதம் வரை வழங்கப்பட்டிருந்தது.

சென்னை,

வருமானவரித்துறைக்கு கடந்த 2020-21-ம் நிதியாண்டுக்கான, அபராதமின்றி வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த செப்டம்பர் மாதம் வரை வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வருமான வரி கணக்கு தாக்கலுக்கு www.incometax.gov.in என்ற புதிய இணையதளத்தை மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்தது. 

இந்த இணையதளத்தில் பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் இந்த புதிய இணையதளம் தொடங்கப்பட்டது முதல் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளதாக வருமானவரி செலுத்துபவர்களிடம் இருந்து புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் முடிய 4 நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்குள் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் உடனடியாக செய்யுமாறு வருமான வரி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 

ரூ.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் இருப்பவர்கள், ரூ.1,000-ம் தாமத கட்டணமும், ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருப்பவர்கள், 2022 ஜனவரி முதல் மார்ச் 31-ந்தேதிக்குள், ரூ.5 ஆயிரம் தாமத கட்டணமும் செலுத்தி வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story