10-ம் வகுப்பு மாணவனை காதலித்து, திருமணம் செய்த பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது


10-ம் வகுப்பு மாணவனை காதலித்து, திருமணம் செய்த பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது
x
தினத்தந்தி 28 Dec 2021 4:09 PM IST (Updated: 28 Dec 2021 4:09 PM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு மாணவனை காதலித்து, திருமணம் செய்த பள்ளி ஆசிரியை ஒருவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சென்னை

அரியலூர் மாவட்டம், மழவராய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் மகன் பரத் (17) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) . இவர் தனியார்ப் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் அம்பாபூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பயிற்சி ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார்.

இந்த நிலையில், பள்ளியில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில், இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மாணவனின் வீட்டுக்கு தெரியவர, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகிலிருக்கும் மூங்கில் பாடி கிராமத்தில் அந்த மாணவனின் உறவினர் வீட்டுக்கு இருவரும் சென்றிருக்கின்றனர். அங்கு வீட்டில் யாரும் இல்லாததால், இருவரும் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

திருமண விவகாரம் மாணவனின் வீட்டாருக்குத் தெரியவந்திருக்கிறது. இதற்கிடையில், தங்கள் காதலை யாரும் ஏற்றுக் கொள்ளாததால் இருவரும் மனமுடைந்து விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி விஷ மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கின்றனர். பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சிறுவனையும், அந்த ஆசிரியயையும் மீட்டு குன்னம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதித்திருக்கின்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்றபின்னர் அந்த ஆசிரியை உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்ததால், உயர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில், மாணவனின் குடும்பத்தினர் குன்னம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இரண்டுமாதமாக போலீசார் விசாரணை நடத்தி வந்தநிலையில், தற்போது அந்த ஆசிரியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்திருக்கிறார்கள். போக்சோ சட்டத்தில் பெண் ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் தான் தற்பொழுது மாவட்டத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.


Next Story