தலைமை செயலாளர் அலுவலகம் முற்றுகை அமைச்சக ஊழியர்கள் போராட்டம்
தலைமை செயலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அமைச்சக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி
தலைமை செயலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அமைச்சக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டம்
புதுவை அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும். உதவியாளர் பணி நியமனத்துக்கான நியமன விதிகளை திருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பான கோப்புகள் தயாரிக்கப்பட்டு தலைமை செயலாளரின் ஒப்புதலுக்காக அனுப்பப் பட்டுள்ளதாக தெரிகிறது. அவற்றுக்கு தலைமை செயலாளர் ஒப்புதல் அளிக்கக்கோரி அமைச்சக ஊழியர்கள் தலைமை செயலகத்தில் உள்ள தலைமை செயலாளரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இந்த போராட்டத்துக்கு ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், ஆறுமுகம், வின்சென்ட், பாலசுப்ர மணியன் உள்பட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து சங்க முக்கிய நிர்வாகி களுடன், தலைமை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை ஏற்றுக் கொண்ட ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
ரங்கசாமி உறுதி
அதன்பின் அவர்கள் சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது தலைமை செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவித்தனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதுதொடர்பாக தலைமை செயலாளருடன் பேசுவதாக முதல்-அமைச்சரும் உறுதி யளித்தார்.
Related Tags :
Next Story