முக கவசம் அணிவதை 100% கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
புத்தாண்டை முன்னிட்டு ஆங்காங்கே மக்கள் கூடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்துவதில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய மூன்றும் முக்கியப் பங்கை வகிக்கின்றன. இந்த மூன்றில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் ஆகிய இரண்டும் கடைபிடிக்கப்படுவதாக தெரியவில்லை.
2 நாட்களுக்கு முன்பு பெசன்ட் நகர் கடற்கரையிலும், தியாகராயநகர் ரங்கநாதன் தெருவிலும், காசிமேட்டிலும் குவிந்துள்ள கூட்டத்தின் புகைப்படங்களைப் பார்க்கும்போது பெரும்பாலானோர் முகக் கவசம் அணியாமல் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. முகக் கவசம் அணிந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அரைகுறையாக அணிந்திருந்தனர். சமூக இடைவெளி என்பது முற்றிலுமாக காற்றில் பறக்கவிடப்பட்டு இருக்கிறது என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.
இதன் காரணமாகத் தான் தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் விளைவு இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 6-வது இடத்துக்கு வந்துவிட்டது. வந்தபின் காப்பதற்குப் பதிலாக, வருமுன் காக்கும் வகையில் முகக் கவசம் அணிவதை நூறு விழுக்காடு கண்டிப்புடன் அமல்படுத்துவதிலும், சமூக இடைவெளி கடைபிடித்தலை கடுமையாக செயல்படுத்துவதிலும் அரசு தீவிரம் காட்ட வேண்டும்.
ஒமைக்ரானை வீழ்த்த வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி நாம் அனைவரும் மிகுந்த கட்டுப்பாடுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இதை உலக சுகாதார அமைப்பின் அறிவியல் அதிகாரி வலியுறுத்தியதோடு, ஒமைக்ரான் தொற்று பரவும் ஆபத்தான இடங்களைக் கண்டறிந்து அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஒமைக்ரான் தொற்று மக்கள் அடர்த்தியாக இருக்கும் இடங்களில் வேகமாக பரவுவதால், ஒமைக்ரான் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை அரசு மக்களிடம் எடுத்துச் சென்று, தடுப்பூசி செலுத்திக் கொண்டோர், செலுத்தாதோர் என அனைவரும் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்பதும், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் 100 சதவீதம்முகக் கவசம் அணிதலையும், சமூக இடைவெளி கடைபிடித்தலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதும், புத்தாண்டை முன்னிட்டு ஆங்காங்கே மக்கள் கூடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்பதும் மருத்துவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
எனவே, ஒமைக்ரான் தொற்று மேலும் பரவுவதைக் தடுக்கும் வகையில் முகக் கவசம் அணிதலையும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தலையும், ஆங்காங்கே மக்கள் கூடுவதைத் தடுக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story