ஆள்மாறாட்டம் செய்து சொத்தை அபகரிக்க முயற்சி 4 பேர் மீது சி பி சி ஐ டி போலீசார் வழக்குப்பதிவு
ஆள்மாறாட்டம் செய்து சொத்தை அபகரிக்க முயன்ற 4 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி
ஆள்மாறாட்டம் செய்து சொத்தை அபகரிக்க முயன்ற 4 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வீட்டுமனை
புதுவை முதலியார்பேட்டை ரோடியர் மில் வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜூ (வயது 58). இவருக்கு சொந்தமான வீட்டுமனை பிருந்தாவனத்தில் உள்ளது.
இந்த நிலையில் அவரது சொத்தை பொதுஅதிகாரம் கொடுத்து விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர். அதில் லோகநாதன் என்பவருக்கு பொது அதிகாரம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆள்மாறாட்டம்
அதிகாரப்பத்திரத்தில் கோவிந்தராஜூ என்ற பெயரில் வேறு நபரின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது. ஆனால் கோவிந்தராஜூவின் தந்தை பெயர், வீட்டு முகவரி, வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியன குறிப்பிடப்பட்டிருந்தன.
எனவே அந்த அதிகார பத்திரம் தன்னுடையது அல்ல என்றும், முறைகேடு செய்து தனது சொத்தை அபகரிக்க முயன்றதாக சரவணன், லோகநாதன், ஏழுமலை, ரமேஷ் ஆகியோர் மீது கோவிந்தராஜூ புகார் அளித்தார். அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போலி பத்திரங்கள்
இதேபோல் புதுவை நீடராஜப்பையர் வீதியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் மூலக்குளத்தில் உள்ள தங்களது குடும்ப சொத்தை போலியான பத்திரங்கள் தயார் செய்து விற்பனை செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.
இதன்பேரில் புதுவையை சேர்ந்த சீனிவாசன், வெங்கடாசலபதி உள்பட 8 பேர் மீது சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் நியூட்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
===
Related Tags :
Next Story