புதுக்கோட்டை அருகே தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை போன 559 பவுன் நகைகள் கிணற்றில் இருந்து மீட்பு


புதுக்கோட்டை அருகே தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை போன  559 பவுன் நகைகள் கிணற்றில் இருந்து மீட்பு
x
தினத்தந்தி 29 Dec 2021 11:27 PM IST (Updated: 29 Dec 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே தொழில் அதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 559 பவுன் நகைகளை கிணற்றில் இருந்து போலீசார் மீட்டனர்.

கோட்டைப்பட்டினம்
தொழில் அதிபர் 
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஜகுபர் சாதிக் (வயது 51). தொழில் அதிபரான இவர், புரூனே நாட்டில் சூப்பர் மார்க்கெட் கடை நடத்தி வருகிறார். கொரோனா பரவல் காரணமாக 1½ ஆண்டுகளாக இவர் ஊருக்கு வரவில்லை. இவரது வீடு, அவரது சகோதரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. 
இந்நிலையில் கடந்த 27-ந் தேதி அதிகாலை ஜகுபர் சாதிக் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள், பீரோவில் வைத்திருந்த 687 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
இதுகுறித்து அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர், தடய அறிவியல் துறை அதிகாரிகள் மோப்பநாய் உதவியோடு தொடர்ந்து விசாரணை செய்தனர். மேலும் மீமிசல் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
559 பவுன் நகைகள் மீட்பு 
இந்நிலையில், போலீசார் சந்தேகத்தின் பேரில், ஜகுபர் சாதிக்கின் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் முயற்சியில் நேற்று ஈடுபட்டனர். தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றியதும் கிணற்றுக்குள் ஒரு பிளாஸ்டிக் பை கிடந்தது. இதையடுத்து அந்த பையை எடுத்து பார்த்த போது, அதில் ஜகுபர் சாதிக் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இருந்தன.
இதையடுத்து அதில் இருந்த 559 பவுன் நகைகளை உறவினர்கள் மற்றும் போலீசார் மீட்டனர். மேலும் மீட்டெடுக்கப்பட்ட நகைகளை வீட்டில் வைத்து அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து எடைபோட்டு 559 பவுன் என உறுதி செய்தனர். பின்னர் இந்த நகைகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக பார்சல் செய்யப்பட்டு மீமிசல் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 
கோர்ட்டில் இன்று ஒப்படைப்பு 
அந்த நகைகளை அறந்தாங்கி கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) ஒப்படைக்க உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது. 
மீட்கப்பட்ட நகைகள் அனைத்தும், கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களால் கிணற்றில் வீசப்பட்டு இருக்கக்கூடும் என போலீசார் கருதுகிறார்கள். மேலும் இந்த சம்பவத்தில் உறவினர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story