காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண்ணை எரித்து கொன்ற சித்தப்பாவுக்கு ஆயுள் தண்டனை


காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண்ணை எரித்து கொன்ற சித்தப்பாவுக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 30 Dec 2021 12:25 AM IST (Updated: 30 Dec 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண்ணை எரித்து கொன்ற சித்தப்பாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

கரூர், 
கூலித்தொழிலாளி
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கணேசபுரத்தை அடுத்த சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 52). இவரது மகள் நந்தினி (19). நந்தினியின் தாய் இறந்த பிறகு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள காக்காதோப்பில் உள்ள தனது சித்தி வீட்டில் தங்கி அங்குள்ள நூற்பாலையில் நந்தினி வேலை பார்த்து வந்தார்.
சித்தியின் கணவர் ராஜ் (41), அப்பகுதியில் உள்ள நூற்பாலையில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
காதலுக்கு எதிர்ப்பு
நந்தினி அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து தனது தந்தை வெங்கடாசலத்திடம் நந்தினி தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த வாலிபரை கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ந் தேதி பெண் பார்க்க வருமாறு கூறியுள்ளனர். இந்தநிலையில், நந்தினி அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.
நந்தினியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது சித்தப்பா ராஜ், நந்தினி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் உடல் கருகிய நிைலயில் நந்தினியை அப்பகுதி மக்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆயுள் தண்டனை
இதையடுத்து குளித்தலை போலீசார் ராஜ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நந்தினி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, ராஜ் மீதான கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி நசீமா பானு வழங்கினார். இதில் குற்றவாளி ராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Next Story