68 தமிழக மீனவர்களையும் மீட்க துரித நடவடிக்கை மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்


68 தமிழக மீனவர்களையும் மீட்க துரித நடவடிக்கை மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 29 Dec 2021 9:51 PM GMT (Updated: 29 Dec 2021 9:51 PM GMT)

புத்தாண்டை குடும்பத்தினருடன் கொண்டாடும் வகையில் 68 தமிழக மீனவர்களையும் மீட்க துரித நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

மதுரை,

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம், மண்டபம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 68 மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணையைச் சேர்ந்தவரும், தமிழர் கட்சியின் மாநில பொதுச்செயலாளருமான தீரன் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அறிக்கை அளிக்க அவகாசம்

அப்போது நீதிபதிகள், “இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களை இந்தியா அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசு வக்கீல் ஆஜராகி, “68 மீனவர்களையும் மீட்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, தமிழக முதல்-அமைச்சர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது” என்றார்.

மத்திய அரசு தரப்பில், “68 மீனவர்களை இந்தியா கொண்டு வருவதற்காக இலங்கை வெளியுறவு துறையுடன் தொடர்பு கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்” என்று கோரப்பட்டது.

நீதிபதிகள் அறிவுறுத்தல்

விசாரணை முடிவில், “புத்தாண்டு தினத்தை தங்களின் குடும்பத்தினருடன் கொண்டாடும் வகையில் 68 மீனவர்களையும் மீட்க துரித நடவடிக்கை எடுங்கள்” என மத்திய அரசை நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

பின்னர், இதுதொடர்பாக விரிவான பதில் மனுவை மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளைக்கு (31-ந்தேதி) ஒத்தி வைத்தனர்.

Next Story