ரெயில் முன் பாய்ந்து சென்னை கல்லூரி மாணவர் தற்கொலை


ரெயில் முன் பாய்ந்து சென்னை கல்லூரி மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 30 Dec 2021 4:28 AM IST (Updated: 30 Dec 2021 4:28 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் முன் பாய்ந்து சென்னை கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு கல்லூரி மாணவர்கள் போட்ட உயிர் பிச்சையில் உயிர் வாழ விரும்பவில்லை என்று வாட்ஸ்அப்பில உருககமான ஆடியோ அனுப்பி விட்டு தற்கொலை செய்துள்ளார்.

திருவள்ளூர்,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை செம்பேடு கிராமம் பஜார் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். கூலித் தொழிலாளி. இவரது மகன் குமார் (வயது 20). இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் பி.ஏ. வரலாறு முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை புறநகர் ரெயிலில் சக நண்பர்களுடன் வந்தார்.

திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் ரெயில் நிலையத்துக்கு வந்த போது சென்னையை சேர்ந்த மற்றொரு பிரபல கல்லூரி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் குமாரை ரெயிலில் இருந்து இறக்கி அழைத்து சென்றனர்.

அப்போது அவர்கள் குமாரை பார்த்து தனியாக வந்து மாட்டிக்கிட்ட. நாங்கள் உனக்கு உயிர் பிச்சை போடுகிறோம், தப்பித்து ஓடிவிடு என்று கூறி அவரை எச்சரித்து அனுப்பினர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு குமார் வாட்ஸ்அப்பி்ல் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘மற்றொரு கல்லூரி மாணவர்கள் போட்ட உயிர் பிச்சையால் உயிர் வாழ விரும்பவில்லை என்னால் வாழ முடியாது. நண்பர்களே தப்பா நினைக்காதீங்க, அப்பா, அம்மாவும் என்னை தப்பா நினைக்காதீங்க. அவங்க போட்ட பிச்சையால் நான் வாழ முடியாது' என உருக்கமாக பேசப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் குமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

தற்கொலை

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 8 மணி அளவில் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்த அடையாள அட்டையை வைத்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது சென்னை மாநில கல்லூரி மாணவர் குமார் என்பது உறுதியானது.

முற்றுகை

இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கிரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் குமாருடன் மாநில கல்லூரியில் படிக்கும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கல்லூரி மாணவரின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என மாணவர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

கல்லூரி மாணவர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பத்மஸ்ரீபபி, தமிழ்ச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், தேவேந்திரன் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்வதற்காக குருவராஜப்பேட்டை எடுத்து சென்றனர். ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட குமாரை கேலி கிண்டல் செய்த கல்லூரி மாணவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story