தென்காசி மாவட்டம் சுரண்டையில் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் பரபரப்பு பாலியல் புகார்
தென்காசி மாவட்டம் சுரண்டையில் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் பரபரப்பு பாலியல் புகார் கூறியுள்ளனர்.
நெல்லை:
திசையன்விளையில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் சுரண்டையிலும் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் பரபரப்பு பாலியல் புகார் கூறியுள்ளனர்.
சுரண்டை அருகே உள்ள பங்களா சுரண்டையில் அரசு நிதி உதவிபெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பிற்கு பாடம் நடத்தும் ஒரு ஆசிரியர் மாணவிகளை அடிக்கடி தன் அருகே அழைத்து சாக்லேட் கொடுத்து பேசுவாராம். அப்போது மாணவிகளின் உடலில் தொடக்கூடாத இடங்களை அவர் தொட்டு பேசுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பல மாணவிகள் தங்கள் மற்ற ஆசிரியரிடமும், பெற்றோரிடமும் புகார் கூறினார்கள்.
இதை அடுத்து அந்த ஆசிரியர் மீது தலைமை ஆசிரியர் இடமும் பள்ளி தாளாளர் இடமும் புகார் கூறினார்கள். இந்தச் சம்பவம் உண்மையா என்று விசாரிப்பதற்காக அந்த பள்ளி ஆசிரியர்கள் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை குழுவினர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் குறித்து மாணவிகளிடமும் ஆசிரியரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் எழுத்துப்பூர்வமாக பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதன் பேரில் பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டுள்ளது. விரைவில் அந்த ஆசிரியரும் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story