சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்...!
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
குறிப்பாக, சென்னையில் இன்று நண்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது. பகல் 1 மணியளவில் தொடங்கிய கனமழை 7 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக எம்.ஆர்.சி. நகரில் 18. செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நுங்கம்பாக்கத்தில் 12 செ.மீ, நந்தனத்தில் 12 செ.மீ., மீனம்பாக்கத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோரும், வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். நகரின் பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story