புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு


புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 31 Dec 2021 12:09 AM IST (Updated: 31 Dec 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

பிரபல நடிகை பங்கேற்கும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல நடிகை பங்கேற்கும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம்
புதுவையில் ஒமைக்ரான் தொற்று பரவல் ஏற்பட்டுள்ள நிலையிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புதுவை அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து சீகல்ஸ் ஓட்டல், பழைய துறைமுகம், சுண்ணாம்பாறு படகு குழாம், பாரடைஸ் பீச் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர தனியார் ஓட்டல்களில் மது விருந்துகள், இசை நடன நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களை பிற மாநிலங்கள் தடை செய்துள்ள நிலையில் புதுவையில் அனுமதி அளித்ததற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
ஐகோர்ட்டு உத்தரவு
ஆனால் கட்டுப்பாடுகளை விதித்து புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புதுவை அரசு அனுமதி அளித்தது. இதை எதிர்த்து ஜெகநாதன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு புத்தாண்டு கொண்டாட தடையில்லை என்று உத்தரவிட்டது.
மேலும் 31-ந்தேதி இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணிவரை மது விற்பனை செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பொதுஇடங்களில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதை தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.
இந்தநிலையில் புதுவை பழைய துறைமுகத்தில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரபல நடிகை சன்னி லியோன் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யப்பட்டது.
கலாசார சீரழிவு
இதற்கிடையே புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் நடிகையை அழைத்து வந்து கலாசார சீரழிவு ஏற்படுத்துவதாகவும், கொரோனா தொற்று பரவல் ஏற்பட வழிவகுப்பதாகவும், இதை கண்டித்தும் புத்தாண்டு கலை நிகழ்ச்சி நடைபெறும் பழைய துறைமுகத்தை முற்றுகையிட போவதாக தமிழர் களம் என்ற அமைப்பு அறிவித்திருந்தது.
இதற்காக நேற்று காலை தமிழர் களம் அமைப்பினர் கலை நிகழ்ச்சி நடைபெறும் இடம் அருகே கூடினார்கள். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து துறைமுக பகுதிக்குள் செல்ல முயன்றனர். தடுப்புகள் வைத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கேயே தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் களம் தலைவர் அழகர், மக்கள் வாழ்வுரிமை கட்சி தலைவர் ஸ்ரீதர், மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன், தந்தை-பெரியார் திராவிடர் கழகம், ஆம்ஆத்மி கட்சி, நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
அரசுக்கு எதிராக கோஷம்
அப்போது சிலர் திடீரென தடுப்புகளை தள்ளிவிட்டு துறைமுகம் நோக்கி ஓடினார்கள். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் ஒரு சிலர் நிகழ்ச்சி நடைபெறும் துறைமுக வளாகத்துக்குள் சென்று புதுவை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்றபோது ரோட்டில் படுத்துக்கொண்டு கோஷங்களை எழுப்பினர். அவர்களில் ஒரு சிலர் அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகளை கிழித்து எறிந்தனர். மேலும் சுவரொட்டிகளையும் கிழித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர். கைதான அனைவரும் போலீஸ் பஸ்சில் ஏற்றப்பட்டு ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா, ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் சூழலில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Next Story