மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னை மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னை,
சென்னையில் காலை முதல் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் பல மணி நேரமாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதியுற்றனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
திடீரென பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. திடீர் மழை காரணமாக பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் முழுவதுமாக நனைந்தபடி, சென்றனர். மழையால் சில இடங்களில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. ஏற்கனவே தேங்கிய மழைநீரால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில், சிக்னல் பிரச்சினையாலும் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். பெரிய மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மழை பாதிப்பு மற்றும் மாநகராட்சி மேற்கொண்டு வரக்கூடிய, மழைநீர் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் மக்கள் அளித்துள்ள புகார்கள், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் முதல்-அமைச்சரிடம் விளக்கம் அளித்தார். மேலும் மழை பாதிப்பினை சரிசெய்யும் பணிகள் குறித்தும் மாநகராட்சி அதிகாரிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கினர்.
Related Tags :
Next Story