சென்னையில் ‘ஒமைக்ரான்’ மரபணு பகுப்பாய்வு தொடக்கம்


சென்னையில் ‘ஒமைக்ரான்’ மரபணு பகுப்பாய்வு தொடக்கம்
x
தினத்தந்தி 31 Dec 2021 1:35 AM IST (Updated: 31 Dec 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ‘ஒமைக்ரான்’ தொற்று மரபணு பரிசோதனை நேற்று தொடங்கியது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று திடீரென அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இந்த தொற்று அறிகுறி உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து ஆஸ்பத்திரிகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ஒமைக்ரான் சிகிச்சை வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டு உள்ளதா? என்பதை உறுதி செய்ய தமிழகத்தில் அறிகுறி உள்ளவர்களின் மாதிரிகள் புனே மற்றும் ஐதராபாத்தில் உள்ள மரபணு பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இதனால் பரிசோதனையின் முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்பட்டது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்ட நோயாளியின் மாதிரி முடிவு வருவதற்குள் அந்த நோயாளி குணமடைந்து வீடு திரும்பும் நிலை தமிழகத்தில் இருந்து வந்தது.

இந்தநிலையில் ஆல்பா, டெல்டா வகை கொரோனா தொற்றை கண்டறியும் விதமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தில் ரூ.4 கோடி மதிப்பில் அதிநவீன மரபணு பரிசோதனை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். ஒமைக்ரான் தொற்றை கண்டறியும் வகையில் நிறுவப்பட்டுள்ள இந்த மையத்தில் ஒமைக்ரான் மரபணு பகுப்பாய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கக்கோரி தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

இந்தநிலையில் சென்னையில் உள்ள மரபணு பரிசோதனை மையத்தில் ஒமைக்ரான் தொற்று பகுப்பாய்வு மேற்கொள்ள மத்திய அரசு நேற்று முன்தினம் அனுமதி அளித்தது. இதையடுத்து சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மரபணு பகுப்பாய்வு மையத்தில் நேற்று ஒமைக்ரான் பரிசோதனை தொடங்கியது.

இந்த ஆய்வகத்தில் ஒரே நேரத்தில் 150 மாதிரிகளில் ஒமைக்ரான் பகுப்பாய்வு மேற்கொள்ளும் அளவுக்கு அதிநவீன எந்திரங்கள் உள்ளது. இந்த பகுப்பாய்வின் முடிவுகள் 5 முதல் 7 நாட்களில் தெரியவரும் எனவும், மேலும் கொரோனா நோயாளிகளின் சிகிச்சை முடிவதற்குள் ஒமைக்ரான் பகுப்பாய்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும் எனவும் ஆய்வக பணியாளர்கள் தெரிவித்தனர்.

Next Story