சென்டிரல்-ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியை இணைக்கும் சுரங்க நடைபாதை: பொங்கலையொட்டி திறக்க அதிகாரிகள் திட்டம்
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியை இணைக்கும் சுரங்க நடைப்பாதையை பொங்கலையொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை,
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் ரூ.400 கோடி மதிப்பில் சென்டிரல் சதுக்கம் என்ற வணிக நிறுவனங்கள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய சதுக்கத்தை அமைக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இதனுடைய ஒரு பகுதியாக சென்டிரல் எதிரில் பொதுமக்கள் எளிதாக சாலையை கடப்பதற்காக சுரங்க நடைப்பாதைகள், வாகனம் நிறுத்தும் இடங்கள், பொழுதுபோக்கு இடங்களையும் அமைக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டு பணியில் ஈடுபட்டு உள்ளது.
கொரோனாவுக்கு முன்பு, சராசரியாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அலுவலக நேரங்களில் சென்டிரல் ரெயில் நிலையத்தை சுற்றி உள்ள சாலையை ஆபத்தான முறையில் கடப்பது தெரியவந்தது. இதில் சிலர் வாகன விபத்துக்களில் சிக்கி படுகாயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக அப்பகுதியில் நன்கு வெளிச்சம் கொண்ட விசாலமான சுரங்க நடைப்பாதை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
அதன்படி சென்டிரல் எதிரில் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாலை பஜார் சாலை, தெற்கு ரெயில்வே கட்டிடம், எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் மூர்மார்க்கெட்டுடன்-பூங்கா ரெயில் நிலையத்தை இணைக்கும் வகையில் 9 மீட்டர் மற்றும் 14 மீட்டர் அளவுகளில் 4 சுரங்க நடைப்பாதைகளை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அமைத்து வருகிறது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தையும் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியையும் இணைக்கும் வகையில்14 மீட்டர் அகலத்தில் சுரங்க நடைப்பாதை அமைக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பரபரப்பான சென்டிரல் எதிரில் உள்ள சாலையை கடப்பதற்கு பதிலாக இந்த சுரங்க நடைப்பாதையை பயன்படுத்தலாம்.
இந்த புதிய சுரங்கப்பாதையில் இருபுறமும் நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்கள்) வசதியுடன், ‘லிப்ட்’ அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. ஏற்கனவே சென்டிரல் ரெயில் நிலையம் எதிரில் உள்ள பழைய சுரங்கநடைப்பாதையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியும் ஜனவரி முதல் வாரத்தில் நிறைவடைந்து பொங்கலையொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
புதிய சுரங்கப்பாதை திறக்கப்பட்டால், பாதசாரிகள், குறிப்பாக எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து பெட்டி படுக்கைகளுடன் வரும் பயணிகள் மற்றும் வயதானவர்கள், குழந்தைகள் சிரமமின்றி சாலையைக் கடக்க முடியும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story