தேனியில் வேன் கவிழ்ந்து விபத்து; 21 பக்தர்கள் காயம்
தேனி பொம்மையகவுண்டன்பட்டி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பக்தர்கள் காயம் அடைந்தனர்.
தேனி,
தேனி மாவட்டம் போடியில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு ஒரு வேனில் பக்தர்கள் சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். நள்ளிரவில் தேனி பொம்மையகவுண்டன்பட்டி சாலைப் பிள்ளையார் கோவில் அருகில் வந்த போது எதிர்பாராதவிதமாக சாலையின் மையத் தடுப்பு சுவரில் மோதி வேன் கவிழ்ந்தது.
இதனால் வேனில் பயணம் செய்த பக்தர்கள் அதற்குள் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் அலறினார். சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு அல்லிநகரம் போலீசாரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் போடியை சேர்ந்த சின்னச்சாமி (55), கவிதா (30), ராணி (60), பாண்டியம்மாள் (37) உள்பட 6 பக்தர்கள் பலத்த காயமும், 15 பேர் லேசான காயமும் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story