அண்ணன் எடப்பாடி வழியில் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறார் - டி.டி.வி.தினகரன் கேலி
தஞ்சையில் பேட்டி அளித்த டி.டி.வி. தினகரன் அண்ணன் எடப்பாடி வழியில் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறார் என கூறினார்.
தஞ்சாவூர்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்கள் இலக்கை அடையும் வரை நாங்கள் துவண்டு போக மாட்டோம். தேர்தல் வெற்றி, தோல்விகளால் நாங்கள் தோற்று விட்டோம் என்று நினைத்தால் அது அவர்களது தவறு.
நாங்கள் ஒரு சமூகப் பொறுப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அரசியலுக்காக எது வேண்டுமானாலும் செய்யக்கூடிய இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இல்லை.
நோய்தொற்று சமூக பரவலாக ஆகிவிட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் சொல்லும் அதே நேரத்தில் பரவலை தடுப்பதற்காக அறிவுரை வழங்க வேண்டிய தமிழக முதல்-அமைச்சரே தஞ்சை, திருச்சி போன்ற இடங்களில் பொதுக்கூட்டங்களில் 5 ஆயிரம் பேரைக் கூட்டி நிகழ்ச்சி நடத்துகிறார்.
இந்த நேரத்தில் அரசியல் செய்யாமல் மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும். இதையெல்லாம் நாங்கள் நீதிமன்றத்தில் சென்று தான் தடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளிய கூடாது. தைரியமாக சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும் அது தான் அரசியல்வாதிக்கு அழகு.
அண்ணன் எடப்பாடி ஆட்சியில் எதையெல்லாம் செய்தாரோ அதையெல்லாம் தாண்டி தற்போது மு.க. ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். அண்ணன் எடப்பாடி வழியில் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறார் என கூறினார்.
Related Tags :
Next Story