சென்னையில் அதி கனமழையை கணிக்க தவறியது ஏன்? புவியரசன் பதில்


சென்னையில் அதி கனமழையை கணிக்க தவறியது ஏன்? புவியரசன் பதில்
x
தினத்தந்தி 31 Dec 2021 1:14 PM IST (Updated: 31 Dec 2021 3:38 PM IST)
t-max-icont-min-icon

மழை பெய்வதை துல்லியமாக கணிக்க ரேடார் உள்ளிட்ட அதிநவீன உபகரணங்கள் சென்னையில் தேவை என வானிலை ஆய்வு மையம் இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.

சென்னை, 

சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர்  புவியரசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தரவுகளின் அடிப்படையில் தான் மழைப்பொழிவு கணக்கிடப்படுகிறது.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று வேகமாக நகர்ந்ததால் சென்னையில் கனமழை பெய்தது.

கடலில் இருக்கும் என கணிக்கப்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலப்பகுதிக்கு திடீரென நகர்ந்ததே அதி கனமழைக்கு காரணம். அதி கனமழையை கணிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று தான் கனமழை பெய்யும் என எதிர்பார்த்தோம்.  இன்று கணிக்கப்பட்ட நிலையில் மேலடுக்கு சுழற்சி வேகமாக நகர்ந்ததால் நேற்றே மிக கனமழை பெய்தது. 

மேகவெடிப்பினால் மழை பெய்தால் அதிக நேரம் மழை பெய்யாது. ஆனால் நேற்று தொடர்ச்சியாக மழை பெய்தது. கணிப்புகளை தாண்டி காற்றின் நகர்வு மற்றும் வேகத்தால் மழையின் அளவு மாறுபடக்கூடும். 

நிலப்பகுதியில் காற்றின் மேலடுக்கு சுழற்சி இருந்தது, திடீரென கடற்பகுதிக்கு நகர்ந்தது.   செயற்கைகோளில் இருந்த தரவுகளின் அடிப்படையில் நேற்று கணிப்பு வெளியிடப்பட்டது. 

அந்தமான் மற்றும் தமிழக கடற்பகுதியில் இருந்து தரவுகள் எடுக்கப்படுகிறது. காற்றின் வேகத்தை செயற்கைக்கோள் துல்லியமாக கணிப்பதில்லை. 

சில நேரங்களில் மழைப்பொழிவை துல்லியமாக சொல்ல இயலாது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய செயற்கைக்கோள் தரவுகளையும் சில நேரங்களில் பயன்படுத்துகிறோம்.

காற்றின் வேகம் மற்றும் சுழற்சியை சில நேரங்களில் துல்லியமாக கணிக்க இயலாது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று வேகமாக நகர்ந்ததால் சென்னையில் கனமழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒருசில நேரங்களில் வேகமாக நகர்ந்து விடும்.  1977ஆம் ஆண்டிலேயே திடீரென அதிக மழை பெய்துள்ளது.

மழை பெய்வதை துல்லியமாக கணிக்க ரேடார் உள்ளிட்ட  அதிநவீன உபகரணங்கள் சென்னையில் தேவை. சென்னை வானிலை மையத்துக்கு நவீன உபகரணங்கள் தேவையா என்ற கேள்விக்கு இயக்குநர் புவியரசன் பதில் அளித்தார்.

Next Story