கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் கார், சுற்றுலா பேருந்தை சேதப்படுத்திய காட்டு யானை - பரபரப்பு வீடியோ
கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் நள்ளிரவில் கார், சுற்றுலா பேருந்தை சேதப்படுத்திய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்த கார் மற்றும் வெளி மாநில சுற்றுலா பேருந்தை வழிமறித்த ஆண் காட்டு யானை ஒன்று, கார் மற்றும் பஸ்சை சேதப்படுத்தி, அட்டகாசத்தில் ஈடுபட்டதால், பயணிகள் மிகுந்த அச்சம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று இரவு 10.30 மணிக்கு கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில், குஞ்சப்பனை சோதனைச் சாவடிக்கு சற்று முன்னதாக, ஆண் காட்டு யானை ஒன்று சாலையின் குறுக்கே நின்று கொண்டிருந்தது. காட்டு யானையைக் கண்ட வாகன ஓட்டிகள் சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை நிறுத்தினர். ஆனால் யானை நிற்பதைப் பொருட்படுத்தாமல் சென்ற டிப்பர் கனரக லாரி ஓட்டுனர் பலமுறை ஒலிப்பானை பயன்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றார்.
இதனால் மிரண்டு போன காட்டு யானை ஓடி வந்து அங்கு நின்று கொண்டிருந்த காரின் முன் பகுதியைத் தனது காலால் மிதித்து சேதப்படுத்தியது. இதனால் அச்சமடைந்த குழந்தைகள் அச்சத்தில் கூச்சலிட்டனர். பின்னர் யானை காரின் பின்னால் நின்றுக் கொண்டிருந்த கேரள மாநில சுற்றுலா வாகனத்தின் முன்பகுதியை தனது தந்தத்தால் குத்தி சேதப்படுத்தியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சற்று நேரத்திற்கு பின்னர் காட்டு யானை அருகிலிருந்த வனப்பகுதிக்குள் சென்றது.
கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் நள்ளிரவில் கார், சுற்றுலா பஸ்சை சேதப்படுத்திய காட்டு யானையால் பரபரப்பு..!#Elephant#Road#Traffic#tourist#bus#Highway#viralvideo#trending#Dailythanthi#dtpic.twitter.com/AwL4aR75Pz
— DailyThanthi (@dinathanthi) December 31, 2021
Related Tags :
Next Story