4 நாட்களாக தலைவர் வரவில்லை: காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு பூட்டுப்போட்ட தொண்டர்கள்


4 நாட்களாக தலைவர் வரவில்லை: காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு பூட்டுப்போட்ட தொண்டர்கள்
x
தினத்தந்தி 3 Feb 2022 3:59 AM IST (Updated: 3 Feb 2022 3:59 AM IST)
t-max-icont-min-icon

4 நாட்களாக தலைவர் வராத காரணத்தால் திருச்சி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு தொண்டர்கள் பூட்டுப்போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 65 வார்டுகளில் தி.மு.க. கூட்டணியில் 4 வார்டுகள் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.

மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு, திருச்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் பூசல் வெடித்தது. மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் மீது குற்றச்சாட்டை சுமத்தியதுடன், தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்தியதே தவறு என்று சில மூத்த தலைவர்களான அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

தலைவர் வரவில்லை

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 4 வார்டுகள் ஒதுக்கப்பட்ட வேதனையில், கட்சி நிர்வாகிகளை சந்திக்க மனமின்றி, மாநகர் மாவட்ட தலைவரான ஜவகர், கடந்த 4 நாட்களாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வரவில்லை என்று தொண்டர்கள் குற்றம்சாட்டினர்.

காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 4 வார்டுகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்கக்கூடிய தலைவர் வராததால், தொண்டர்கள் வேதனை அடைந்தனர். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 2-வது வார்டில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் போட்டியிட உள்ளதாக பேசப்பட்டு வந்தது. தற்போது அவரும் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மவுனம் கடைபிடித்து வருவதால், தொண்டர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

கட்சி அலுவலகத்துக்கு பூட்டு

இந்நிலையில் தினமும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்து சென்ற தொண்டர்கள் சோர்வடைந்தனர்.

தலைவரும் கட்சி அலுவலகத்திற்கு வராததால், ஏன் அது திறந்திருக்க வேண்டும்? என்று தொண்டர்கள் நேற்று அருணாசலம் மன்றத்தின் அனைத்து கதவுகளுக்கும் பூட்டுப்போட்டு வெளியேறினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

Next Story