சென்னை: பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை- போலீஸ்காரர் கைது
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
கடந்த ஜனவரி-30 அன்று மாலையில் பெண் ஒருவர் வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தார்.
அப்போது குடிபோதையில் இருந்த போலீஸ்காரரான வனராஜ் என்பவர், பேருந்து நிறுத்தத்தில் தனியாக நின்றுகொண்டிருந்த பெண்ணை பார்த்துள்ளார். சாதாரண உடையில் இருந்த வனராஜ், அந்த பெண்ணிடம் ஆபாசமான சைகைகள் செய்தும், அத்துமீற முயன்றதாகவும் கூறப்படுகிறது.
சுதாரித்துக்கொண்ட அந்தப் பெண் வனராஜிடமிருந்து தப்பித்து வீட்டை அடைந்து நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்ததுடன், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அது வனராஜ் என்பதை உறுதிசெய்தனர். பின்னர் போலீசார் அவர் மீது பெண்கள் துன்புறுத்தலுக்காக வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட வனராஜ், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஒரு மாதத்திற்கு முன் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், மூன்று வாரங்களுக்கு முன் பணியில் சேர்ந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story