என்ஆர்காங்கிரஸ் பாஜக மோதல்


என்ஆர்காங்கிரஸ் பாஜக மோதல்
x
தினத்தந்தி 4 Feb 2022 12:01 AM IST (Updated: 4 Feb 2022 12:01 AM IST)
t-max-icont-min-icon

என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையே மோதல் எழுந்துள்ளதாக புதுவை அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.

என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையே மோதல் எழுந்துள்ளதாக புதுவை அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கூட்டணி ஆட்சி
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசில் முதல்-அமைச்சர்        ரங்கசாமி மற்றும் 3 அமைச்சர்கள் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் இடம் பெற்றுள்ளனர். பா.ஜ.க. சார்பில் வெற்றிபெற்ற செல்வம் சபாநாயகராகவும், நமச்சிவாயம், சாய் சரவணன் குமார் ஆகியோர் அமைச்சர்களாகவும் உள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் 6 பேர் எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் (அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக்) பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களை தவிர பா.ஜ.க.வை சேர்ந்த வெங்கடேசன், அசோக்பாபு, வி.பி.ராமலிங்கம் ஆகியோர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர்.
வாரிய தலைவர் பதவி
அமைச்சரவை விரிவாக்கத்தின் போதே என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையே உரசல் ஏற்பட்டது. 3 அமைச்சர் பதவியை கேட்டு பிடிவாதம் பிடித்தது. இறுதியில் பா.ஜ.க.வுக்கு 2 அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது.
மேலும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாரிய தலைவர் பதவி வழங்க கோரிக்கை விடுத்தனர். வாரிய தலைவர் பதவி வழங்கக்கோரி எம்.எல்.ஏ. ஒருவர் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ரங்கசாமி மறுப்பு
அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி, கட்சி தலைமையிடம் சென்று கடிதம் வாங்கி வந்தால் வாரிய தலைவர் பதவி வழங்குவதாக கூறினார். இதற்கிடையே வாரிய தலைவர்கள் பதவியை பெறுவதில் பா.ஜ.க. மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்கள்.
அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி, வாரியங்கள் தற்போது பெருமளவு நஷ்டத்தில் இயங்குவதாகவும், அதனால் தற்போது வாரிய தலைவர் பதவி வழங்க முடியாது என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அமைச்சர் மோதல்
ரங்கசாமியின் இந்த முடிவு பா.ஜ.க. மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாரிய தலைவர் பதவி தொடர்பாக தங்கள் கட்சியின் மேலிடம் மூலம் வலியுறுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே அமைச்சர் ஒருவரும், முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக தகவல் பரவி வருகிறது. இதன் காரணமாக அமைச்சர்களுக்கு புதிய கார்கள் வாங்கப்பட்டு வரும் நிலையில் அவர் புதிய காரை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. இடையே மோதல் வெடித்துள்ளதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Next Story