6 நகராட்சி தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு


6 நகராட்சி தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு
x
தினத்தந்தி 4 Feb 2022 1:50 AM IST (Updated: 4 Feb 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

6 நகராட்சி தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மதுரை, 
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ராமசுப் பிரமணியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம், கூடலூர், சின்னமனூர், பெரியகுளம் மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய 6 நகராட்சிகள் உள்ளன. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலை யொட்டி, தேனி மாவட்டத்தில் உள்ள இந்த 6 நகராட்சி தலைவர் பதவிகளை பெண்களுக்கு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
விதிமுறைகளின்படி 50 சதவீத இடஒதுக்கீடு தான் வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சியிலும் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி இருப்பது ஏற்கத்தக்கதல்ல. இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே இதுதொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்த அரசாணையை ரத்து செய்துவிட்டு, விதிமுறைகளை பின்பற்றி தேனி மாவட்ட நகராட்சி தலைவர் பதவிகளுக்கு உரிய ஒதுக்கீட்டை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல் முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் உள்ளாட்சி பதவிகளுக்கு ஒதுக்கப்படவில்லை. 
மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கைப்போல ஏற்கனவே சில வழக்குகள், உள்ளாட்சி பதவி ஒதுக்கீடு சம்பந்தமான அரசாணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றார். அப்போது நீதிபதிகள், இதுதொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து பட்டியலிடும்படி ஐகோர்ட்டு பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story