மருத்துவ படிப்பில் சேர்ந்த ஏழை மாணவியை வீடு தேடிச்சென்று வாழ்த்திய மதுரை கலெக்டர்...!


மருத்துவ படிப்பில் சேர்ந்த ஏழை மாணவியை வீடு தேடிச்சென்று வாழ்த்திய மதுரை கலெக்டர்...!
x
தினத்தந்தி 4 Feb 2022 4:24 AM IST (Updated: 4 Feb 2022 4:24 AM IST)
t-max-icont-min-icon

தோட்ட வேலை பார்த்துக்கொண்டே படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவியை வீடு தேடிச்சென்று மதுரை கலெக்டர் அனிஷ்சேகர் வாழ்த்தினார்.

மதுரை,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பானா மூப்பன்பட்டி. கிராமத்தை சேர்ந்தவர் சன்னாசி. இவருடைய மனைவி மயில்தாய். இருவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுடைய மகள் தங்கப்பேச்சி. இவர் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்.

இவர் கடந்த முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருந்தாலும் அரசு ஒதுக்கீட்டில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.. ெபற்றோர் கூலி வேலை செய்வதால் குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது. 

எனவே தானும் தோட்ட வேலை மற்றும் பூப்பறிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டே, அதில் கிடைத்த வருமானத்தின் மூலம் படித்து தங்கப்பேச்சி மீண்டும் நீட் தேர்வு எழுதினார். இதில் 256 மார்க் வாங்கிய தங்கப்பேச்சிக்கு, அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிப்பதற்கான இடம் கிடைத்தது.

குமரி மாவட்டம் மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் அவருக்கு படிக்க இடம் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்றிருக்கிறது. மாணவி தங்கப்பேச்சி, விரைவில் மருத்துவ கல்லூரிக்கு செல்ல இருக்கிறார்.

விவசாய பணி செய்துகொண்ட படித்து, மருத்துவ கல்லூரிக்கு செல்ல இருக்கிற மாணவி தங்கப்பேச்சியை மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் நேற்று அவரது வீடு தேடிச்சென்று பாராட்டினார். மாணவிக்கு வெள்ளை நிற கோட், ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கி கலெக்டர் பாராட்டினார்.

மாணவியின் பெற்றோருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்ததோடு, மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனவும், பல அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஊக்கமாக இருக்க வேண்டும் என்றும் தங்கப்பேச்சிக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.


Next Story