புதுச்சேரி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு நாராயணசாமி வீடு முன் பைப் வெடிகுண்டு வைத்தவர்களுக்கு சிறை தண்டனை
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டில் ‘பைப்’ வெடிகுண்டு வைத்த வழக்கில் 5 பேருக்கு 7 ஆண்டு, ஒருவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
புதுச்சேரி
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டில் ‘பைப்’ வெடிகுண்டு வைத்த வழக்கில் 5 பேருக்கு 7 ஆண்டு, ஒருவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
‘பைப்’ குண்டு
புதுச்சேரி எல்லையம்மன் கோவில் தெருவில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் வீடு உள்ளது.
இவர் கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மத்திய மந்திரியாக இருந்தார்.
இந்தநிலையில் கடந்த 29.1.2014-ம் ஆண்டு அவரது வீடு முன் நிறுத்தி இருந்த ஒரு காருக்கு அடியில் மர்ம பொருள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை மீட்டு பார்த்ததில் ஒரு அடிநீள இரும்பு பைப் இருபுறமும் அடைக்கப்பட்டு, மின்சார வயரால் திரி இணைக்கப்பட்டு இருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்து அப்போது போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த காமராஜ் தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்ததில் அது ‘பைப்’ வெடிகுண்டு வகை என்பதை உறுதி செய்தனர். இதன்பின் அந்த குண்டு பாதுகாப்பாக அழிக்கப்பட்டது.
6 பேர் கைது
இதுதொடர்பாக புதுவை ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதைத்தொடர்ந்து நாராயணசாமிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவரின் வீட்டை சுற்றி 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் அந்த வழக்கு தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ.) அமைப்புக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரித்து தமிழர் விடுதலை படையை சேர்ந்த சிவகங்கை திருசெல்வம் என்ற குமார் (வயது44), தங்கராஜ் என்ற தமிழரசன் (43), கவியரசன் என்ற ராஜா (37), கலைலிங்கம் என்ற கலை (45), ஜான் மார்ட்டின் என்ற இளந்தழல் (31), மதுரை கார்த்தி என்கிற ஆதி (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது தமிழகத்திலும் வழக்குகள் உள்ளதால் சேலம் சிறையில் திருசெல்வம், சென்னை புழல் சிறையில் தங்கராஜ், வேலூர் சிறையில் கார்த்தி அடைக்கப்பட்டனர். கடலூர் சிறையில் கவியரசன், கலைலிங்கம், ஜான் மார்ட்டின் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர்.
துப்பாக்கி போலீஸ்
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி சிறப்பு கோர்ட்டில் தலைமை நீதிபதி செல்வநாதன் தலைமையில் விசாரணை நடந்து வந்தது. இதுதொடர்பாக 54 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
இதையடுத்து தீர்ப்பு அளிக்கப்படுவதாக அறிவித்து இருந்தநிலையில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 6 பேரும் புதுச்சேரி கோர்ட்டுக்கு நேற்று அழைத்து வரபட்டனர். இதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துப்பாக்கிய ஏந்திய போலீசாரும் நிறுத்தப்பட்டனர்.
சிறை தண்டனை
கொரோனா தொற்று காரணமாக காணொலி மூலம் நீதிபதி விசாரணை நடத்தினார். ‘பைப்’ குண்டு வைத்த வழக்கில் திருசெல்வம், தங்கராஜ், கவியரசன், கலைலிங்கம், கார்த்தி, ஜான் மார்ட்டின் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கான தண்டனை விவரம் மதியம் 3 மணிக்கு தெரிவிப்பதாக நீதிபதி கூறினார்.
அதன்படி கோர்ட்டு கூடியதும், ‘பைப்’ வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட திருசெல்வம், கவியரசன், கலைலிங்கம், கார்த்தி, ஜான் மார்ட்டின் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தங்கராஜுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அத்துடன் திருசெல்வத்திற்கு மட்டும் ரூ.3 ஆயிரம், மற்ற 5 பேருக்கு தலா ரூ.3,500 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தொகையை கட்டத்தவறினால் ஓராண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி செல்வநாதன் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு தரப்பில் வக்கீல் திருநாவுக்கரசு ஆஜரானார்.
Related Tags :
Next Story