நீட் மசோதா: அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என தகவல்
நீட் மசோதா தொடர்பாக நடைபெறும் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என அதிமுக தலைமை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் நடத்தப்படும் ‘நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
கவர்னர் அந்த மசோதாவை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பிவைத்திருக்க வேண்டும். ஆனால், இவ்வளவு நாள் காலம் தாழ்த்திய நிலையில், தற்போது திடீரென அந்த மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவிட்டார். இது, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், ‘நீட்' தேர்வு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்காக, சட்டசபை அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக சட்டசபையில் இடம்பெற்றுள்ள தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம் ஆகிய 12 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இந்தநிலையில் நீட் விலக்கு தொடர்பாக இன்று நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என தலைமை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீட் விலக்கிற்காக ஏற்கனவே நடந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்ற நிலையில் தற்போதைய கூட்டத்தில் பங்கேற்க வில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாஜக பங்கேற்காது என அறிவித்த நிலையில் அதிமுகவும் முதல்-அமைச்சரின் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக சார்பில் சி.விஜயபாஸ்கர் ஏற்கனவே நடந்த கூட்டத்தில் பங்கேற்று நீட் விலக்கிற்கு ஆதரவு கூறினார்.
Related Tags :
Next Story