கணித பாடத்துக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்


கணித பாடத்துக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 6 Feb 2022 5:23 AM IST (Updated: 6 Feb 2022 5:23 AM IST)
t-max-icont-min-icon

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய ‘டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது:-

பல்கலைக்கழக, கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித்தேர்வில் கணிதப்பாடத்தேர்வு பிப்ரவரி 16-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், அதேநாளில் அதே கணிதப் பாடத்துக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேசிய தகுதித்தேர்விலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்விலும் கணிதப்பாடத்தேர்வை எழுதுபவர்கள் ஒரே போட்டியாளர்கள்தான். இரு தேர்வுகளும் ஒரே நாளில் நடத்தப்பட்டால், ஏதேனும் ஒரு தேர்வை எழுதும் வாய்ப்பு போட்டியாளர்களிடம் இருந்து பறிக்கப்படும். இது அநீதியானது.

தேசிய தகுதித்தேர்வுக்கான அட்டவணை ஜனவரி 17-ந் தேதியே வெளியிடப்பட்டுவிட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய அட்டவணை பிப்ரவரி 3-ந் தேதிதான் வெளியானது. தேசிய தகுதித்தேர்வு நாளில், ஆசிரியர் தேர்வு வாரியம் கணிதப் பாடத்தேர்வை அறிவித்ததுதான் குழப்பங்களுக்கு காரணம் ஆகும். தேர்வு அட்டவணை தயாரிப்பது, முடிவுகளை வெளியிடுவது, இடஒதுக்கீடு வழங்குவது என அனைத்திலும் ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பின்றி நடந்து கொள்கிறது. இருவகை தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்க வசதியாக கணிதப்பாடத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story