பெண் காவலர் உடல் தகுதி தேர்வு முதல் நாளில் 188 பேர் தகுதி


பெண் காவலர் உடல் தகுதி தேர்வு  முதல் நாளில் 188 பேர் தகுதி
x
தினத்தந்தி 7 Feb 2022 7:30 PM IST (Updated: 7 Feb 2022 7:30 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் பெண் காவலர் உடல் தகுதி தேர்வு இன்று தொடங்கியது. முதல் நாளில் 188 பேர் எழுத்துத்தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

புதுச்சேரி
புதுச்சேரியில் பெண் காவலர் உடல் தகுதி தேர்வு  இன்று தொடங்கியது. முதல் நாளில் 188 பேர் எழுத்துத்தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

காவலர் தேர்வு

புதுச்சேரி காவல்துறையில் காவலர்கள், ரேடியோ டெக்னீசியன், டெக் ஹேண்டலர் உள்ளிட்ட 431 பணியிடங்களுக்கான காவலர் தேர்வு கடந்த மாதம் (ஜனவரி) 19-ந் தேதி தொடங்கியது. இதற்காக மொத்தம் 17 ஆயிரத்து 227 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 14 ஆயிரத்து 787 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
கொரோனா விதிமுறைகளை பின்பற்றப்பட்டு கடந்த மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 5-ந் தேதி வரை ஆண்களுக்கான தேர்வு நடைபெற்றது. உடல் தகுதித்தேர்வில் பங்கேற்றவர்களில் 1,844 பேர் எழுத்துத்தேர்வுக்கு தகுதி பெற்றனர். தொற்று பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 21-ந் தேதி மீண்டும் உடல் தகுதி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உடல் தகுதி தேர்வு

இந்தநிலையில் பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு   இன்று தொடங்கியது. இதற்காக  இன்று முதல்நாளில் 750 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவர்களில் 324 பேர் மட்டுமே பங்கேற்றனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிப்பார்ப்பு மற்றும் உடல் தகுதித்தேர்வு நடந்தது.
இதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. போட்டியில் பங்கேற்ற 324 பேர்களில் 188 பேர் எழுத்தேர்வுக்கு தகுதி பெற்றனர். பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு வருகிற 11-ந் தேதி வரை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story