சிவசங்கர் பாபாவுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க கோரி வழக்கு


சிவசங்கர் பாபாவுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க கோரி வழக்கு
x
தினத்தந்தி 8 Feb 2022 2:49 AM IST (Updated: 8 Feb 2022 2:49 AM IST)
t-max-icont-min-icon

சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை வழங்க கோரி அவரது சகோதரி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பல வழக்குகளில் சிவசங்கர் பாபா கடந்த ஆண்டு ஜூன் 16-ந்தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது புழல் சிறையில் இருக்கும் அவருக்கு கீழ் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில் அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சிவசங்கர் பாபாவின் சகோதரி ஜெயலட்சுமி கணபதி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தனியார் ஆஸ்பத்திரியில்...

அந்த மனுவில், ‘‘என் சகோதரன் சி.என். சிவசங்கரன் நீரிழிவு, இதய நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, அவருக்கு இதயம் தொடர்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால் அரசு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்காமல் உள்ளது. அதனால், என் சகோதரனின் உடல் நலம் குறித்து அறிக்கை தரவேண்டும். அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சொந்த செலவில் சிகிச்சை பெற என் சகோதரனை அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் 23-ந்தேதி புழல் சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தும், எந்த பதிலும் இல்லை. எனவே எனது மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

பதில் வேண்டும்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, வழக்கிற்கு தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story