புதுவை அருகே நெஞ்சை பதற வைத்த சம்பவம் ஆழ்துளை கிணறுக்காக தோண்டப்பட்ட பக்கவாட்டு குழியில் விழுந்து 2 குழந்தைகள் பலி ஒரேநேரத்தில் இழந்ததால் பெற்றோர் கதறல்


புதுவை அருகே நெஞ்சை பதற வைத்த சம்பவம் ஆழ்துளை கிணறுக்காக தோண்டப்பட்ட பக்கவாட்டு குழியில் விழுந்து 2 குழந்தைகள் பலி ஒரேநேரத்தில் இழந்ததால் பெற்றோர் கதறல்
x
தினத்தந்தி 8 Feb 2022 11:18 PM IST (Updated: 8 Feb 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

புதுவை அருகே ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக தோண்டப்பட்ட பக்கவாட்டு குழியில் விழுந்து ஒரே நேரத்தில் 2 குழந்தைகள் விழுந்து இறந்தனர். இதனை கண்டு பெற்றோர் கதறிய சம்பவம் காண்போரின் நெஞ்சை பதற வைத்தது.

புதுச்சேரி
புதுவை அருகே ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக தோண்டப்பட்ட பக்கவாட்டு குழியில் விழுந்து ஒரே நேரத்தில் 2 குழந்தைகள் விழுந்து இறந்தனர். இதனை கண்டு பெற்றோர் கதறிய சம்பவம் காண்போரின் நெஞ்சை பதற வைத்தது.

ஆழ்துளை கிணறு

புதுவை அருகே விழுப்புரம் மாவட்டம் பெரம்பை கிராமத்தை சேர்ந்தவர் ராமு என்ற சுரேஷ் (வயது 33). கொத்தனார் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி இனிதா (29). இவர்களுக்கு லெவின் (4), ரோகித் (3) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.
இந்தநிலையில் ராமுவின் பக்கத்து வீட்டில் நேற்று முன்தினம் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இதன் அருகே பக்கவாட்டில் 5 அடிக்கு குழி தோண்டி வடிகால் அமைத்தனர். அதன் வழியாக ஆழ்துளை கிணறு தோண்டும் போது வெளியேறிய சகதி கலந்த கழிவுநீர் விடப்பட்டது. 
ஆழ்துளை கிணறு தோண்டி முடித்ததும் அதை மூடி வைத்து விட்டு தொழிலாளர்கள் சென்று விட்டனர். ஆனால் 5 அடிக்கு தோண்டப்பட்ட பக்கவாட்டு குழியை மூடாமல் விட்டு விட்டனர்.

குழிக்குள் தவறி விழுந்தனர்

 மதியம் 2 மணி அளவில் லெவின், ரோகித் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சேறும் சகதியுமாக கிடந்த அந்த குழிக்குள் இருவரும் தவறி விழுந்து விட்டனர். அந்த பகுதியில் யாரும் இல்லாததால் குழந்தைகள் குழிக்குள் விழுந்ததை கவனிக்க முடியாமல் போனது.
இந்தநிலையில் விளையாடச் சென்ற குழந்தைகள் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் இனிதா அவர்களை தேடிச் சென்றார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

கதறி அழுத பெற்றோர்

இந்தநிலையில் மாடு மேயக்கச் சென்ற பெண் ஒருவர் ஆழ்துளை கிணறு அமைத்த பகுதி வழியாக நடந்து சென்றபோது குழந்தைகளின் கால்கள் குழிக்கு வெளியே தெரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
இதனால் அலறி அவர் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். அப்போதுதான் விளையாடச் சென்ற குழந்தைகள் குழிக்குள் தலை குப்புற விழுந்து இறந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த குழந்தைகளின் உடல்களை மீட்டுப் பார்த்ததில் லெவின், ரோகித் என்பது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்து ராமு, அவரது மனைவி இனிதா ஆகியோர் அங்கு ஓடிவந்து தங்களது குழந்தைகளை மடியில் போட்டு கதறி அழுதனர்.

கிராமமே சோகம்

இதுகுறித்து அறிந்து ஆரோவில் போலீசார் அங்கு விரைந்து வந்து 2 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆழ்துளை கிணறு அமைக்க தோண்டப்பட்ட பக்கவாட்டு குழியில் விழுந்து ஒரே நேரத்தில் 2 குழந்தைகளையும் இழந்து அவர்களது பெற்றோர் கதறிய சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.
----------

Next Story