எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்..


எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்..
x
தினத்தந்தி 9 Feb 2022 6:24 AM IST (Updated: 9 Feb 2022 6:24 AM IST)
t-max-icont-min-icon

சிறிய வகை செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவதற்காக புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் வருகிற ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

சென்னை,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது. இதில், பி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகளில் ஆயிரம் கிலோ வரையிலும், ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் 3 டன் எடை கொண்ட செய்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவ முடியும். குறைந்த எடை கொண்ட நானோ வகை செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டு வந்தது.

தற்போது நானோ போன்ற எடை குறைந்த அதாவது 500 கிலோ வரை எடை கொண்ட செயற்கைகோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்வதற்காக, இஸ்ரோ எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை வடிவமைத்து உள்ளது. பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை ஒப்பிடுகையில், எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் ஏவுவது மற்றும் வடிவமைப்பு செலவுகள் குறைவாகும்.

இந்த வகை ராக்கெட்டை வருகிற ஏப்ரல் மாதம் எஸ்.எஸ்.எல்.வி. -டி1 மைக்ரோ சாட் செயற்கைகோளை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. வளரும் நாடுகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தயாரிக்கும் சிறிய வகை செயற்கைகோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்துவதற்காக எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளது. இஸ்ரோ இதுவரை, 50-க்கும் மேற்பட்ட சிறிய வகை செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவி உள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் தான் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை தற்போதைய இஸ்ரோ தலைவர் சோமநாத் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டின் மொத்த எடை 110 டன்னாகும். மிகச்சிறிய ராக்கெட் என்பதால் இதனை 72 மணி நேரத்தில் ஒருங்கிணைக்க முடியும். பெரிய வகை ராக்கெட்டுகள் 70 நாட்களில் சுமார் 60 பேர் இணைந்து ராக்கெட்டை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

ஆனால் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டை வடிவமைக்க வெறும் 6 பேர் மட்டுமே போதும். மிகக்குறுகிய காலத்தில் முழுப்பணியும் முடிந்து ரூ.30 கோடி மட்டுமே செலவாகும். அந்தவகையில், தேசிய தேவையை பூர்த்தி செய்ய ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 முதல் 20 எஸ்.எஸ்.எல்.வி.கள் தேவைப்படலாம். எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் கடந்த 2019-ம் ஆண்டு வணிக ரீதியான முன்பதிவைப் பெற்று இருப்பதுடன், இஸ்ரோ வணிகப் பிரிவுடன் கடந்த 2019-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரு நேரத்தில் பல மைக்ரோ வகை செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவதற்கு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் மிகவும் பொருத்தமானதாகும்.

மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

Next Story