ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் திருச்சி ராமஜெயம். இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை நடைபயிற்சிக்காக வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது மர்ம கும்பல் அவரை கடத்தி சென்று கை, கால்களை கட்டி தாக்கி, வாயில் பிளாஸ்திரி ஒட்டி கொலை செய்து, உடலை திருவளர்சோலை பகுதியில் வீசிச்சென்றது.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தியும் கொலையாளிகள் யார்?, ராமஜெயம் எதற்காக கடத்தி கொலை செய்யப்பட்டார்? என்பதற்கான எந்தவித தடயமும் சிக்கவில்லை. இந்தநிலையில் கொலையுண்ட ராமஜெயத்தின் சகோதரர் கே.என் ரவிச்சந்திரன் சிபிஐ விசாரணையில் எந்தவித முன்னேற்றம் இல்லை என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது நீதிபதி பாரதிதாசன் இன்று அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
ராமஜெயம் படுகொலை வழக்கை நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கும்; தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், அரியலூர் டிஎஸ்பி மதம், சிபிஐ அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு இவ்வழக்கை விசாரிக்கும். வரும் 21-ந் தேதிக்குள் இந்த குழு விசாரணை தொடங்கி 5 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தமிழக அரசு முழு உதவிகளை வழங்கவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிபிசிஐடி, சிபிஐ என 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story