ஓசூர் அருகே பயங்கரம் பெயின்டர் வெட்டிக்கொலை: கோவில் முன்பு தலை வீச்சு-கள்ளக்காதல் விவகாரமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே எலுவப்பள்ளியில் பெயிண்டர் கொடூர கொலை செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே எலுவப்பள்ளியில் பெயிண்டர் கொடூர கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் தலையை தனியாக வெட்டி கோவிலில் வைத்து சென்ற்யு உள்ளனர். உடல் 100 மீட்டருக்கு அப்பால் கண்டெடுக்கபட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள எலுவப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசப்பா மகன் பிரதீப் (25). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் 2வது பிரசவத்திற்காக பிரதீப்பின் மனைவி பெங்களூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 4 மாதமாகிறது. இதனால் பிரதீப் எலுவப்பள்ளியில் உள்ள வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
இந்த கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்பு நேற்றிரவு 11 மணியளவில் ஆண் தலை மட்டும் வெட்டப்பட்டு தனியாக கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக பாகலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அது பிரதீப்பின் தலை என்பது தெரியவந்தது. உடலை தேடினர். கிடைக்கவில்லை. பின்னர் மீட்கப்பட்ட தலையை மட்டும் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மோப்பநாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.
இரவு முழுவதும் மோப்பநாய் உதவியுடன் அந்த பகுதியில் பிரதீப்பின் உடலை தேடினர். விடிய விடிய தேடி வந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில், மாரியம்மன் கோயிலில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள கேழ்வரகு கொல்லை என்ற இடத்தில் மோப்பநாய் நின்றது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் தேடியபோது பிரதீப்பின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரதீப்பை வேறு எங்கேயாவது கொலை செய்து விட்டு, தலையை கோவில் முன்பும், உடலை கேழ்வரகு கொல்லை பகுதியிலும் மர்ம நபர்கள் இரவு நேரத்தில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story